மருத்துவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

by Editor / 01-07-2021 08:20:19am
மருத்துவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

"தன்னலமற்று மக்கள் நலம் காக்கும் மகத்தான பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் மருத்துவர்கள் அனைவருக்கும் 'இந்திய மருத்துவர்கள் நாளில்' வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவரும் மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சருமான டாக்டர். பிதான் சந்திர ராய் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் நாள் இந்திய மருத்துவர்கள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 80 ஆண்டுகள் வாழ்ந்த டாக்டர். பி.சி. ராய் அவர்கள் பிறந்ததும் இறந்ததும் ஜூலை முதல் நாள்தான்.

பிறப்பு எளிதாக அமைவதற்கும், இறப்பிலிருந்து உயிர்களைக் காப்பதற்கும் மருத்துவ சேவை அவசியமாகிறது என்பதன் அடையாளமாக இந்த நாள் விளங்குகிறது. தற்போதைய கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவர்களின் சேவை இன்றியமையாததாய் இருக்கிறது. அதனை உணர்ந்து வெள்ளை உடுப்பு அணிந்த ராணுவம்போல் அல்லும் பகலும் அரும்பணியாற்றுகின்றனர் மருத்துவர்கள்.

குறிப்பாக, கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தமிழ்நாட்டில் தீவிரமாக இருந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்தது. அப்போது நாம் மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கைகளில், தளகர்த்தர்களாக சிப்பாய்களாக, முன்களவீரர்களாகப் பணியாற்றி, நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்த மருத்துவர்களுக்கு இந்த நன்னாளில் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எளிய மக்களின் உயிரையும் உடல்நலத்தையும் பாதுகாக்கும் வகையில், திமுக ஆட்சியில் வலுப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு, மேலும் வலிமைபெற இந்த அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உங்களின் ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன்.

இது மக்களின் அரசு. மக்களின் உயிர்காக்கும் மருத்துவர்களுக்கான அரசாகவும் என்றும் இருக்கும் என்ற உறுதியினை வழங்குகிறேன். அதன் அடையாளமாகத்தான் கரோனா தடுப்புப் பணியில் தங்கள் இன்னுயிரை ஈந்த மருத்துவர்களின் குடும்பத்திற்கு உடனடி நிவாரண உதவியாக ரூ.25 இலட்சமும், பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டது.

நீங்கள் மக்களைக் காக்கும் மகத்தான பணியைத் தொடருங்கள். இந்த அரசு உங்களைப் பாதுகாக்கும் முன்களவீரராகச் செயலாற்றும்; துணை நிற்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via