பாம்பன் புதிய பாலம் விவகாரம்: விசாரணை நடத்த 5 பேர் கொண்ட தொழில்நுட்பக்குழு.

by Editor / 29-11-2024 12:11:09am
பாம்பன் புதிய பாலம் விவகாரம்: விசாரணை நடத்த 5 பேர் கொண்ட தொழில்நுட்பக்குழு.

பாம்பனில் 21 கி.மீ நீளத்திற்கு  550 கோடி ரூபாய் செலவில் கடலில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. 
பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில், அதனை ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர்  தாக்கல் செய்த அறிக்கையில்,  பாலத்தில் சில விதிகள் பின்பற்றப்பட வில்லை .பாலத்தில் அரிப்பு மற்றும் துருப்பிடித்தல் பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து தென்னக ரயில்வே அளித்துள்ள விளக்கம் வருமாறு:

புதிய பாம்பன் பாலத்தின் சிறப்பம்சங்கள் 

புதிய பாம்பன் பாலம் பல்வேறு புதுமையான மற்றும் பாதுகாப்பான சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாம்பன் ரயில் பாலம் 2.05 கி.மீ. நீளத்திற்கு கடலின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவிலேயே முதன்முறையாக கப்பல் போக்குவரத்திற்காக செங்குத்தாக மேலே எழும்பி செல்லும் வகையில் நவீன பால அமைப்பு 72 மீட்டர் நீளத்திற்கு நிறுவப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு ஒரு சர்வதேச ஆலோசனை நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது. இதில் ஐரோப்பிய மற்றும் இந்திய மாதிரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வடிவமைப்பு சென்னை இந்திய தொழில்நுட்ப பல்கலைகழக வல்லுனர்களால் சரிபார்க்கப்பட்டுள்ளது. இது வெளிநாட்டு தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் வடிவமைப்பு என்பதால், ரயில்வே வாரிய  அறிவுறுத்தலின்படி ரயில்வே துறையும், ரயில்வே வடிவமைப்பு தர நிர்ணய அமைப்பும் . 
தேவையான தொழில்நுட்ப ஆய்வுகள் செய்தன. மேலும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த வடிவமைப்பை தீவிர ஆய்வு செய்ய மும்பை இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழக  வல்லுனர்களை ரயில்வே வாரியம் கேட்டுக்கொண்டது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட இரு முறை தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் இந்த வடிவமைப்பை தெற்கு ரயில்வே அங்கீகரித்தது. எனவே இந்த புதிய பாலம் பிரபல சர்வதேச ஆலோசனை நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு இந்தியாவின் இரண்டு முக்கிய தொழில்நுட்ப பல்கலைக்கழக வல்லுநர்கள் ஆய்வு செய்து அங்கீகரித்த பின்பே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பில் ரயில்வே வடிவமைப்பு தர நிர்ணய அமைப்பு செய்த மாறுதல்களையும் இந்தியாவின் இரு பிரபல தொழில்நுட்ப பல்கலைக்கழக  வல்லுனர்கள் ஆய்விற்குப் பின்பு தெற்கு ரயில்வே அங்கீகரித்துள்ளது. பாலத்தின் செயல் திறனுக்கு இணைப்பு  பற்ற வைப்புகள் (வெல்டிங்) முக்கியம் வாய்ந்தவை. எனவே இந்த பற்றவைப்புகள் நவீன அல்ட்ராசானிக் இயந்திரம் மூலம் 100% சரிபார்க்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி வெல்டிங் ஆராய்ச்சி நிறுவனமும் பற்றவைப்புகளை 100% சரி பார்த்துள்ளது. அதன் பிறகு தெற்கு ரயில்வே நிர்வாகமும் பற்ற வைப்புகளை சரிபார்த்தது.  உலகத்தில் அதிக அளவில் துருப்பிடிக்கும் பகுதிகளில் பயன்படுத்தப்படும் பாலி சிலிக்கான் வகை பெயிண்டிங் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை இந்த வடிவமைப்பை 35 ஆண்டுகள் துருப்பிடிக்காமல் பாதுகாக்கும். மேலும் துரு பிடிக்காமல் தடுக்க தரமான இரும்பு,  தரமான கான்கிரீட் வடிவமைப்புகள், இணைப்புகளில் பலமான பற்றவைப்புகள், பாதைகளில் நெகிழியிழை அமைப்புகள், எளிதில் ஆய்வு செய்யும் வசதி, கைப்பிடி அமைப்பு ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. பாலம் நவீன தொழில்நுட்பத்துடன் மற்றும் சிறந்த கட்டுமான உத்திகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தெரிவித்த ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்பட்டு முழுமையாக பின்பற்றப்படும்.என தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் பாம்பன் புதிய பாலம் விவகாரம்: விசாரணை நடத்த 5 பேர் கொண்ட தொழில்நுட்பக்குழுவை அமைத்தது ரயில்வே வாரியம்.

 

Tags : பாம்பன் புதிய பாலம் விவகாரம்: விசாரணை நடத்த 5 பேர் கொண்ட தொழில்நுட்பக்குழு.

Share via