கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரி மோதிய விபத்தில் ஐயப்ப பக்தர்களின் பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி

தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் உள்ள ஆரியங்காவு பகுதியில் ஐயப்ப பக்தர்கள் வந்து கொண்டிருந்த பேருந்தும், தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு கனிம வளம் ஏற்றிச் சென்ற கனரக லாரியும் மோதிய விபத்தில் பேருந்தானது 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 22 நபர்கள் படுகாயம் அடைந்த நிலையில், தகவல் அறிந்து விரைந்து வந்த ஆரியங்காவு போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக புனலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி தனபால் என்பவர் உயிரிழக்கவே, 5 பேர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 16 நபர்கள் தற்போது புனலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஆரியங்காவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, முதற்கட்ட விசாரணையில் ஐயப்ப பக்தர்கள் சேலம் மாவட்டத்திலிருந்து சபரிமலைக்கு சென்ற நிலையில், சாமி தரிசனத்தை முடித்து விட்டு அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது, ஆரியங்காவு பகுதியில் இந்த விப்பத்தானது நிகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், லாரி ஓட்டுனரின் அஜாக்கிரதையால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில், இந்த விபத்து தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.குறிப்பாக,தமிழக - கேரளா எல்லையில் தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : லாரியும் மோதி ஐயப்ப பக்தர்களின் பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி; 21 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.