பெஞ்சல் புயல் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகளுக்கு ரூ.6,675 கோடி ஒதுக்க ஒன்றிய குழுவினரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
பெஞ்சல் புயல் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகளுக்கு ரூ.6,675 கோடி ஒதுக்க வேண்டும் என்று, புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு வந்துள்ள ஒன்றிய குழுவினரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கள ஆய்வு செய்ய பல்துறை ஒன்றிய குழுவினர் 8 பேர் நேற்று சென்னை வந்தனர்.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் ஒன்றிய விவசாய மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர் கே.பொன்னுசாமி, ஒன்றிய நிதித்துறை இயக்குநர் சோனாமணி அவுபம், ஒன்றிய ஜல்சக்திதுறை இயக்குநர் சரவணன், ஒன்றிய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை முன்னாள் பொறியாளர் தனபாலன் குமரன், ஒன்றிய எரிசக்தித் துறை உதவி இயக்குநர் ராகுல் பாட்ச்கேட்டி, ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் பாலாஜி சந்தித்து பேசினர். அப்போது, முதல்வர், ஒன்றிய குழுவிடம் பெஞ்சல் புயலின் தற்காலிக மற்றும் நிரந்தர மறு சீரமைப்புப் பணிகளுக்கு ₹6,675 கோடி வழங்க வேண்டிய முழு விவரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தார். மேலும், ஒன்றிய குழுவிடம் தமிழ்நாட்டிற்கு தேவையான நிவாரணப் பணிகள், நிரந்தர மற்றும் தற்காலிக மறு சீரமைப்பு பணிகளுக்காக நிதியை பெற்றுத்தர விரைந்து பரிந்துரைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதை தொடர்ந்து நடந்த ஆய்வுக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் ஒன்றிய குழுவிடம் பெஞ்சல் புயல் சேத விவரங்கள் குறித்து விளக்கப் பட காட்சி மூலம் விளக்கினார்கள். முக்கிய அரசுத்துறை செயலாளர்களுடன் கலந்தாலோசித்து ஒன்றிய குழுவினர் மாவட்டங்களுக்கு கள ஆய்வு செல்வது பற்றி முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி ஒன்றிய குழுவினர் இன்று மற்றும் நாளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புயல் மற்றும் வெள்ள சேதத்தை பார்வையிட உள்ளனர். கள ஆய்வை ஒருங்கிணைக்க மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஏற்கனவே தங்கி முன்னேற்றப்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : பெஞ்சல் புயல் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகளுக்கு ரூ.6,675 கோடி