அதிமுகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு

by Editor / 18-08-2021 05:01:34pm
அதிமுகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறு விசாரணையை திமுக அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில், இதனைக் கண்டித்து அதிமுகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.


சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது.ய சட்டப்பேரவைக்குக் கருப்பு பேட்ச் அணிந்து வந்த அதிமுக உறுப்பினர்கள் கொடநாடு விவகாரம் தொடர்பாகக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று அனுமதி கேட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கொடநாடு விவகாரத்தை திமுக எதற்காக தற்போது கையில் எடுத்து இருக்கிறது” என்று கேள்வி எழுப்பினார். 


தொடர்ந்து அவையிலிருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். கலைவாணர் அரங்குக்கு வெளியே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குப் போடும் அராஜக செயலில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுடைய பிரச்சினைகளுக்கு உரியத் தீர்வு காணாமல், ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளைப் பொய் வழக்குகளால் தன் அதிகார பலத்தால் நசுக்க வேண்டும் என்ற தவறான கொள்கையை திமுக அரசு கையில் எடுத்துள்ளது.


இதனைக் கண்டிக்கும் வகையில், அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவரும் குரல் கொடுத்து வருகிறார். ஆனால் அவருக்கு உரிய வாய்ப்பு கொடுக்காமல் அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்காமல் அடுத்த நடவடிக்கைகளுக்குக் கொண்டு போகும் சூழலில்தான் சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கிறது.
அதிமுகவினரைப் பொருத்தவரை எந்தவிதமான வழக்குகளுக்கும் அஞ்சமாட்டோம். சட்டப்படி எதிர்கொள்வோம். திமுகவினரின் இந்த செயல்பாடுகளை கண்டித்து இன்றும் நாளையும் அதிமுக முழுமையாகச் சட்டப்பேரவை நிகழ்வுகளைப் புறக்கணிக்கும் என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொடநாடு வீட்டில் சில கொள்ளை கும்பல், சயன் மற்றும் அவரது கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் ஜெயலலிதா தங்கியிருந்த இல்லத்தில் கொள்ளை அடிக்க முயற்சி செய்தனர். அப்போது அவர்கள் காவலாளியைத் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது வழக்கு முடியும் தருவாயில் இருக்கும் சூழலில் திமுக வேண்டுமென்றே சயனுக்கு சம்மன் அனுப்பி ரகசிய வாக்குமூலம் பெற்று இருப்பதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது. அதில் என்னையும் அதிமுகவினர் சிலரையும் சேர்த்துள்ளதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருக்கிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். 


ஏற்கனவே முக்கிய சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு வழக்கு முடியும் நிலையில் வரும் 27ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த சூழலில் திமுக வேண்டுமென்றே அதிமுக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அச்சுறுத்த முயற்சிக்கிறது.


இவ்வழக்கில் குற்றவாளிகளை ஜாமீனில் எடுப்பதற்காக ஜாமீன் தாரர்களாக இருந்தவர்கள் திமுகவினர் தான். இவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம். குற்றவாளிகளுக்காக திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி இருக்கிறார்.
இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று உதகை அமர்வு நீதிமன்றத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் 3 முறை உத்தரவிட்டது. அப்போது, டிராபிக் ராமசாமி உயிருடன் இருந்தபொழுது திமுக தூண்டுதலின் பேரில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை மறு விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் திமுக வழக்கறிஞர்கள் அரசின் வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுகின்றனர். குற்றவாளிகளுக்காக யார் வாதாடினார்களோ அவர்கள் அரசு வழக்கறிஞர்களாக உள்ளார்கள். அரசுத் தரப்பும் குற்றவாளிகளும் இணைந்து செயல்படுகின்றனர்.


வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அதனை மறைக்க இப்படியான அரசியல் நாடகத்தை திமுக நடத்தி வருகிறது. எங்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலைமையைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஏற்கனவே நீதிமன்ற விசாரணையில் உள்ள சயன் எதுவும் கூறாத நிலையில் மீண்டும் போலீஸ் விசாரணை நடத்துவது ஏன்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதனிடையே கொடநாடு கொலை வழக்கு தொடர்பாகச் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கொடநாடு கொலை வழக்கு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தோம்.
கொடநாடு குற்ற சம்பவங்களில் நீதிமன்ற அனுமதியுடன் முறைப்படி விசாரணை நடக்கிறது. இவ்வழக்கில் அரசியல் தலையீடும், உள்நோக்கமும் இல்லை. முறையான விசாரணை நடந்து வருகிறது. அதனடிப்படையில் உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

 

Tags :

Share via