விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 60

by Editor / 30-12-2024 10:52:16pm
விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 60

ஸ்ரீஹரிகோட்டா: விண்வெளி ஆய்வு மையத் திட்டத்தின் முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

 இரவு 9.58 மணிக்கு முதலில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.ஆனால் 2 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு ராக்கெட் செலுத்தப்பட்டது.இதையடுத்து ஸ்பேஸ் டாக்கிங்கிற்கான SpaDeX உள்ளிட்ட 2 விண்கலங்களை சுமந்து சென்றது. ராக்கெட் ஏவ தாமதமடைய காரணம் என்ன என்றுத் தெரியவில்லை. விரைவில் அதுகுறித்த தகவல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. 

எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்​தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்​ ஒருபகுதியாக ஸ்பேடெக்ஸ் திட்டம் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின் கீழ் விண்ணில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதற்காக ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என 2 விண்கலன்களை தனியார் நிறுவன பங்களிப்புடன் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த இரட்டை விண்கலன்கள் தலா 220 கிலோ எடை கொண்டவையாகும். 

 

Tags : விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 60

Share via