ரூ.250 கோடி மதிப்பிலான 39 சாமி சிலைகளை வைத்திருக்கும் அமெரிக்க பெண்-பொன்மாணிக்கவேல் அதிர்ச்சி தகவல்.
தென்காசி மாவட்டம், குற்றாலம், குற்றாலநாதர் கோவிலில் உள்ள பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திர சபையில் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் சாமி தரிசனம் செய்த நிலையில், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- தென்காசி மாவட்டம் பாப்பாங்குளம் பகுதியில் உள்ள அருள்மிகு வாடா கலைநாயகி உடனுறை திருவெண்காடர் கோவிலில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான வீணாதர தக்ஷிணாமூர்த்தி சிலையானது 45 ஆண்டுகளுக்கு முன்பு களவாடப்பட்டுள்ளதாகவும், அந்த சிலையானது தற்போது அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் உள்ள சுஷ்மா ஷெரீன் என்ற பெண்ணிடம் உள்ளதாகவும், அவர் தற்போது அந்த சிலையை ரூ.12 கோடி ரூபாய் ஏலத்தொகை நிர்ணயம் செய்து ஏலம் விடுவதற்காக தயார் நிலையில் உள்ளார். ஆகவே, அதனை மீட்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மூலம் மாதத்திற்கு ரூ. 53 கோடியே 75 லட்சம் வரி வசூல் செய்வதாகவும், இதை ஆண்டுக்கு ஒப்பிடுகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் இருந்து ரூ.428 கோடி ரூபாய் வரி வசூலும், தொடர்ந்து ஆடிட்டிங் வரி என்கின்ற பெயரில் ரூ.228 கோடியும் என மொத்தம் ரூ.656 கோடி ரூபாய் வரி வசூல் செய்யும் அரசு கோயில் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை கூட வழங்க மறுத்துவருகிறது.
குறிப்பாக, மறைமுகமாக கோடிக்கணக்கில் வரும் வசூல் செய்து வரும் இந்த அரசு கோயில்களில் முழுமையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளாமல் தமிழகத்தில் பல்வேறு கோவில்கள் பராமரிப்பு இன்றி காணப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, பேசிய அவர் அமெரிக்காவில் உள்ள சுஷ்மா ஷெரின் என்ற பெண்ணிடம் ரூ.280 கோடி மதிப்பிலான சுமார் 39 சிலைகள் உள்ளதாகவும், இது தொடர்பாக பல்வேறு ஆவணங்களை தலைமைச் செயலாளரிடம் வழங்கியும் அதனை மீட்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அந்த சிலைகளில் ஒன்றான வீணாதர தக்ஷிணாமூர்த்தி சிலையானது இன்னும் சில நாட்களில் ஏலம் போக உள்ள நிலையில் அதனை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்து அந்த சிலைகளை மீட்பதற்கான தேவையான நடவடிக்கைகளை சிவ பக்தன் என்கின்ற முறையில் நான் மேற்கொள்வேன் என்று கூறினார்.
Tags : ரூ.250 கோடி மதிப்பிலான 39 சாமி சிலைகளை வைத்திருக்கும் அமெரிக்க பெண்-பொன்மாணிக்கவேல் அதிர்ச்சி தகவல்.