ராஜபாளையம்: பொதுமக்களை விரட்டி விரட்டிக் கடித்த தெருநாய்கள்; ஒரே நாளில் 39 பேர் காயம்!

by Editor / 23-01-2025 10:24:49am
ராஜபாளையம்: பொதுமக்களை விரட்டி விரட்டிக் கடித்த தெருநாய்கள்; ஒரே நாளில் 39 பேர் காயம்!

ராஜபாளையத்தில் இரு வேறு பேருந்து நிறுத்தங்களில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் உட்பட 39 பேரை தெரு நாய்கள் விரட்டி, விரட்டி கடித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ராஜபாளையம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லையால் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள ஜவகர் மைதானம் பேருந்து நிறுத்தம் மற்றும் தென்காசி சாலையில் உள்ள சொக்கர் கோயில் பேருந்து நிறுத்தம் ஆகியவற்றில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளை தெரு நாய்கள் திடீரென விரட்டி, விரட்டி கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அப்பகுதியில் தெருக்களில் நடந்து சென்றவர்களையும் தெரு நாய்கள் துரத்திச் சென்று கடித்துள்ளது. இப்படி ஒரே நாளில் 39 பேர் நாய் கடியால் காயமடைந்தது ராஜபாளையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் தீவிர காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து நேற்று காலை முதல் கால்நடைத்துறை உதவி இயக்குநர் ராஜராஜேஸ்வரி, நகர் நல அலுவலர் டாக்டர் பரிதா வாணி தலைமையில் ராஜபாளையம் பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து வெறிநாய்கடி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.

 

Tags : ராஜபாளையம்: பொதுமக்களை விரட்டி விரட்டிக் கடித்த தெருநாய்கள்; ஒரே நாளில் 39 பேர் காயம்!

Share via