தெலங்கானாவில் நரபலி? பச்சிளம் குழந்தையை படுகொலை செய்த தாய்.

by Editor / 16-04-2021 03:47:32pm
தெலங்கானாவில் நரபலி?  பச்சிளம் குழந்தையை படுகொலை செய்த  தாய்.

இளம்பெண் ஒருவர் தனது 6 மாத பச்சிளம் குழந்தையை பலிக்கொடுத்த கொடூர சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது.
மூடநம்பிக்கையால், நரபலி கொடுக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பத்திரிக்கைகள், சமூக வலைதளம் வாயிலாக பல விழிப்புணர்வுகள் பகிரப்பட்டாலும், இன்னும் அந்த நம்பிக்கையிலிருந்து பலர் விடுபடாமல் இருக்கின்றனர்.
அண்மையில் நன்கு படித்த குடும்பத்தை சேர்ந்த இரு இளம்பெண்கள் நரபலியாக உயிரை மாய்த்துக்கொண்ட தகவல் மக்களை பெரும் நடுக்கத்தில் ஆழ்த்தியது. இதேபோல் ஆந்திராவில் பெற்ற தாயே இரு மகள்களை அடித்து கொலை செய்து நரபலி கொடுத்த கொடூர சம்பவம் அரங்கேறியது.அதுமட்டுமல்லாது ஆந்திராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் மறைவதற்குள்ளாக அடுத்த கொலை தெலங்கானாவில் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் சூரியாபேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவர் புஜ்ஜி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது.அண்மையில் இவருக்கு நாகதோஷன் இருப்பதாக சொல்லப்படவே, அவரது கணவர் அவரையும் அவரது குழந்தையையும் தனியே தங்க வைத்துள்ளார்.இதனால் புஜ்ஜி கடும் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் புஜ்ஜி ஜோசியர் ஒருவரை அணுகியபோது, அவர் தோஷம் நீங்க பெற்ற குழந்தையை நரபலி கொடுக்க அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இதனால் மனதை கல்லாக்கிக்கொண்ட அவர், சிவனை நினைத்து இரவு நேரங்களில் வீட்டில் தனியே பூஜை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தனது அறையை பூட்டிக்கொண்ட அவர், சிவன் படத்திற்கு முன்பாக குழந்தையை கிடத்தி, துடிதுடிக்கும் அழுக் குரலையும் பொருட்படுத்தாது கத்தியால் குழந்தையின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் அந்த ரத்தத்தை சிவனுக்கு காணிக்கையாக படைத்துள்ளார்.
குழந்தையின் மரண ஓலத்தை கேட்ட குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வெகு நேரம் கதவு தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு குழந்தை சடலமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் புஜ்ஜியை தற்போது கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடவுளுக்கு இணையாக கருதப்படும் குழந்தையை, பெண் தனது சுயநலத்திற்காக பலிக்கொடுத்த இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நரபலி போன்ற மூடநம்பிக்கையிலிருந்து எப்போது இதுபோன்றோர் மீள்வார்கள் என பலரும் இணையதளத்தில் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

Tags :

Share via