அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான FBI-யின் இயக்குநராக, இந்திய வம்சாவளியான காஷ் படேல் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டார்.

அமெரிக்காவின் FBI என்பது உள்நாட்டு உளவு மற்றும் சட்ட அமலாக்கத் துறையாகும். மிகவும் சக்திவாய்ந்த இந்த முகமையின் இயக்குநர்களாக அமெரிக்கர்களே காலம்காலமாக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை, FBI-யின் இயக்குநராக நியமிக்க அந்நாட்டு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர விசுவாசியான காஷ் படேலுக்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 49 வாக்குகளும் கிடைத்தன.
இதை தொடர்ந்து, 45 வயதான காஷ் படேலை FBI-யின் இயக்குநராக அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்வு செய்தார். செனட் சபையில் நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை மீது சத்தியம் செய்தபடி FBI இயக்குநராக காஷ் படேல் பதவியேற்றுக் கொண்டார். இதனை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய காஷ் படேல், உலகின் மிகப் பெரிய நாட்டின் சட்ட அமலாக்க முகமைக்கு தலைமை தாங்கவிருக்கும் முதல் தலைமுறை இந்தியருடன் நீங்கள் பேசுகிறீர்கள் என தெரிவித்தார். FBI-க்கு உள்ளேயும், அதற்கு வெளியேயும் பொறுப்புடன் செயல்படுவேன் என உறுதியளித்துள்ளார்.
Tags : FBI-யின் இயக்குநராக, இந்திய வம்சாவளியான காஷ் படேல்