வீட்டு தீர்வை ரசீது கொடுக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்ட வருவாய் உதவியாளர் - சுற்றி வளைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை.

தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகாவிற்கு உட்பட்ட தெற்குசத்திரம் பகுதியை சேர்ந்தவர் காளிராஜன். இவர் புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட 28-வது வார்டு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலி மனை வாங்கிவீடு கட்டியுள்ளார்.
இந்த நிலையில், அவரது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வேண்டி புளியங்குடி நகராட்சியில் விண்ணப்பம் செய்த நிலையில், அங்கிருந்த ஊழியர்கள் அந்த இடத்திற்கு முதலில் காலி மனை ரசீது போட்டு பின்னர் வீட்டு ரசீது வாங்குங்கள் என கூறவே, காலி மனை ரசீது வாங்கிய பின் வீட்டுமனை ரசீதுக்காக புளியங்குடி நகராட்சியில் காளிராஜன் விண்ணப்பம் செய்துள்ளார்.
இந்த நிலையில், அவர் விண்ணப்பத்தின் அடிப்படையில் காளிராஜன் வீட்டிற்கு சென்ற நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமர், வீட்டு பகுதியை அளந்து முடித்தவுடன் தனக்கு ரூ.20,000 லஞ்சம் கொடுத்தால் உடனடியாக வீட்டு தீர்வை ரசீது பெற்று தருவதாக கூறியுள்ளார்.
அதற்கு காளிராஜன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறவே ரூ.15 ஆயிரமாவது கொடுங்கள் என வருவாய் உதவியாளர் கூறிய நிலையில், இது தொடர்பாக காளிராஜன் தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்றைய தினம் ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரம் பணத்தை காளிராஜனை வைத்து வருவாய் உதவியாளர் அகமது உமரிடம் கொடுக்க வைத்த நிலையில், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக வருவாய் உதவியாளரை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், புளியங்குடி நகராட்சியில் தற்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் நகராட்சி வளாகமானது பெரும் பரபரப்புடன் காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags :