விஜயகாந்த் 69வது பிறந்தநாள்: ஸ்டாலின், எடப்பாடி, ஓ.பி.எஸ். வாழ்த்து

by Editor / 25-08-2021 03:05:00pm
விஜயகாந்த் 69வது பிறந்தநாள்: ஸ்டாலின், எடப்பாடி, ஓ.பி.எஸ். வாழ்த்து

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 69வது பிறந்தநாளையொட்டி அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக, தொண்டர்கள் யாரும் பிறந்த நாளன்று நேரில் வர வேண்டாம் எனவும், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டாட வேண்டும் எனவும், விஜயகாந்த் அறிக்கை வாயிலாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும் விரைவில் உடல்நலப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாகவும் அவர் அதில் கூறியிருந்தார். இதனால் தொலைபேசி மூலமும், சமூக வலைதளங்களிலும் அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டாலின்

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விஜயகாந்த்துக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் "தே.மு.தி.க. தலைவரும், தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் 'கேப்டன்' விஜயகாந்த் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்த நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி, ஓ.பி.எஸ்.

அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் விஜயகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இன்று தனது 69வது பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த்துக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், இந்நாளில் அவர் உடல் ஆரோக்கியத்துடன், எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் விஜயகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும்’ என்ற குறிக்கோளை மனதில் ஏந்தி, ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை இன்றளவிலும் வழங்கிக் கொண்டிருக்கும் விஜய்காந்த் நல்ல ஆரோக்கியத்துடன் 100 வயது கடந்து பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரியட்டும்’.

மேலும் விஜய்காந்தின் நற்பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via