முதலமைச்சரின் பொது நிவாரண  நிதிக்கு தனி இணையதளம்

by Editor / 09-07-2021 06:12:01pm
முதலமைச்சரின் பொது நிவாரண  நிதிக்கு தனி இணையதளம்


 

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான தனி இணையதளத்தை  நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகையை வெளிப்படையாக அறிவிக்க இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மே 6- ஆம் தேதிக்கு முன்பு வந்த நிதியை தனிக் கணக்காக வைக்கவும், மே 7- ஆம் தேதிக்கு பிறகு வந்த நிதியைத் தனிக் கணக்காக வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதி இணையதளம் சிறப்பாக இருந்ததால், அதை முன்மாதிரியாகக் கொண்டுள்ளோம். மொபைல், வெளிநாடு, உள்நாடு, கார்ப்பரேட் என எல்லா வகை நிதி வரவுகள் குறித்தும் இணைய தளத்தில் இடம்பெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மே 7- ஆம் தேதி முதல் நேற்று (08/07/2021) வரை ரூபாய் 472.62 கோடி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வந்துள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் 14 மாதங்களில் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 400 கோடிதான் வந்துள்ளது. எளிதாக நிவாரணத் நிதியை செலுத்துவதுடன் செலவு குறித்த விவரங்களையும் அறிந்துக் கொள்ளலாம். பி.எம். கேர்ஸ் நிதியில் எந்த வெளிப்படைத்தனமையும் கிடையாது. இதுவரை 241 கோடி ரூபாய் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்". இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

 

Tags :

Share via