மதுரை மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரியமிக்க சமத்துவ மீன்பிடித் திருவிழா.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அதிகார நாகப்பன் சிவல்பட்டியில் இன்று சமத்துவ மீன் பிடித்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இங்குள்ள காவல் தெய்வமான உலக மாதா கோவிலுக்கு பாத்தியப்பட்ட அதிகாரக் கண்மாய் சுமார் 120 ஏக்கர் பாசனப்பகுதியை கொண்டதாகும். ஒவ்வொரு வருடமும் கண்மாயின் பாசன பகுதியில் விவசாய பணிகள் முடிவடைந்தவுடன் சித்திரை அல்லது வைகாசி மாதங்களில், மாதத்தின் சனிக்கிழமை அன்று மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கம்.
அதன்படி இன்று மீன் பிடி திருவிழா நடத்துவது என்று கிராம பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து நாகப்பன் சிவல்பட்டி, கம்பாளிபட்டி, பூதமங்கலம், நல்லசுக்காம்பட்டி, நெல்லுகுண்டுபட்டி, கொடுக்கம்பட்டி, வஞ்சிநகரம், சருகு வளையப்பட்டி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் தெக்கூர், காளாப்பூர்,சிங்கம்புணரி உள்ளிட்ட சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நத்தம், மூங்கில்பட்டி, சமுத்திராப்பட்டி உள்ளிட்ட பல்வேறு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்தோடு கச்சாவலை, ஊத்தாவலை, அரிவலை உள்ளிட்ட பல்வேறு மீன் பிடி உபகரணங்களை கையில் ஏந்தியவாறு மீன்களை பிடிக்க ஆவலோடு கண்மாயின் இருபுறமும் அதிகாலை முதற்கொண்டு காத்திருந்தனர்.
இந்நிலையில் ஊர் பெரியவர்கள் உலக மாதா கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தி மடைபகுதிக்கு வந்து இந்த வருடமும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என்று வேண்டி வெள்ளை வீசினர்.
அதைத் தொடர்ந்து ஏற்கனவே மீன்களை பிடிக்க மீன்பிடி உபகரணங்களோடு ஆவலோடு காத்திருந்த பொதுமக்கள் கண்மாய்க்குள் இறங்கி போட்டி போட்டுக் கொண்டு மீன்களைப் பிடிக்க தொடங்கினர்.
இதில் ஜிலேபி, கட்லட், ரோகு, கட்லா, அயிரை, பாப்லட், விரால், கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு வகை மீன்கள் கிடைக்கப் பெற்றன. மீன்களை ஆவலோடு பிடித்த பொதுமக்கள் மகிழ்ச்சியோடு தங்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்றனர்.
Tags : மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரியமிக்க சமத்துவ மீன்பிடித் திருவிழா.