நடிகர் ஆர்யா போல் பேசி ஜெர்மனி பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி

by Editor / 25-08-2021 08:08:11pm
நடிகர் ஆர்யா போல் பேசி ஜெர்மனி பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி

இலங்கையை சேர்ந்த பெண் விட்ஜா, ஜெர்மனியில் குடியுரிமை பெற்று அங்குள்ள சுகாதாரத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவரிடம், நடிகர் ஆர்யா 70 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக குடியரசு தலைவர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக கடந்த பிப்ரவரி மாதம் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், நடிகர் ஆர்யாவுடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்தும், கொரோனாவில் பண கஷ்டத்தில் இருப்பதாக தெரிவித்து தன்னிடம் 70 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலமாக பெற்று ஏமாற்றியதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. ஆர்யாவுக்கு பணம் அனுப்பியதாக கூறப்பட்ட வங்கி கணக்கு மற்றும் மெசேஜ் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதையடுத்து நடிகர் ஆர்யா கடந்த 10ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். அப்போது அவரது செல்போனை பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ததில் ஜெர்மனி பெண்ணுக்கு எந்த விதமான மெசேஜும், செல்போன் அழைப்புகளும் ஆர்யா செல்போன் எண்ணிலிருந்து செல்லவில்லை என்பதும், ஜெர்மனி பெண்ணுக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் தொடர்பில்லை எனவும் சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து ஆர்யா போல் பேசியதாக கூறப்பட்ட அந்த நபர் யார் என சமூக வலைதளம் மற்றும் பண பரிவர்த்தனை செய்த வங்கி கணக்கு ஆகியவற்றை வைத்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் நடிகர் ஆர்யா பெயரில் போலி வலைதளத்தை உருவாக்கி ஜெர்மனி பெண்ணிடம் பண பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்நிலையில், வலைதள ஐபி முகவரியை வைத்து, ராணிப்பேட்டை பெரும்புலிப்பாக்கத்தில் பதுங்கி இருந்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹூசைனி பையாக் ஆகியோர் என தெரியவந்தது. முகமது அர்மான் நடிகர் ஆர்யாவின் தீவிர ரசிகர் என்பதும், ஆர்யாவின் புகைப்படத்தை வைத்து முகநூலில் கணக்கு ஒன்று தொடங்கி அதன் மூலமாக பல இளம்பெண்களை நண்பராக்கி உள்ளார்.

பின்னர் தன்னை ஆர்யா போல் அறிமுகப்படுத்திக் கொண்டு ஜெர்மனி பெண் விட்ஜாவிடம் பேசி செல்போன் எண்ணை பெற்றுள்ளார். மேலும் காதல் வலையில் விழவைத்து ஆர்யாவை போல் குரலை மாற்றி மிமிக்ரி செய்து திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்துள்ளார். திருமணம் செய்துகொள்ள அவர் ஒப்புதல் தெரிவித்தவுடன் ஆர்யாவின் தாயார் பேசுவது போல் முகமது அர்மான் ஆப் மூலமாக குரலை மாற்றி பேசும் செல்போன் செயலியை பயன்படுத்தி பண பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அந்த பெண்ணிடமிருந்து 70லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது. மோசடி செய்தவுடன் ஜெர்மனி பெண்ணை ஆர்யா தாயார் போல் பேசி மிரட்டியதும் தெரியவந்தது.

மைத்துனரான முகமது ஹூசைனி ஹர்மானுக்கு உடந்தையாக இருந்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக ஜெர்மனி பெண் முகமது ஹூசைனி வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பியதும் தெரியவந்தது. ஜெர்மனி பெண்ணை ஏமாற்றியவுடன் குற்றத்தை உணர்ந்த இந்த கும்பல் காவல் நிலையத்தில் சரணடைய வந்ததாகவும், ஆனால், அப்போது புகார் ஏதும் வராததால் கைது செய்யாமல் அனுப்பிவிட்டதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இருவரையும் சென்னை அழைத்து வந்து இதேபோல் வேறு பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து மத்தியகுற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். கைதான 2 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து வருகிற 7-ம்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா இந்த வழக்கு குறித்து டுவிட்டரில் பதிவு ஒன்று பகிர்ந்துள்ளார். அதில், உண்மையான குற்றவாளியை கண்டறிந்து கைது செய்ததற்காக போலீஸ் கமிஷனர், சைபர் கிரைம் கூடுதல் ஆணையர் மற்றும் சைபர் கிரைம் டீம் ஆகியோருக்கு நன்றி. இந்த மோசடி எதிர்பார்க்காத மன அதிர்ச்சியை தந்தது. என்னை நம்பிய அனைத்து நபர்களுக்கும் நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.

 

 

Tags :

Share via