கடன் பிரச்சனையால்மனைவியை சரமாரி வெட்டிக்கொலை செய்த கணவன் கைது

ஆலங்குளம் அருகே பயங்கரம்: கடன் பிரச்னை சம்பந்தமாக மனைவியை சரமாரி வெட்டிக்கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.ஆலங்குளம் அருகேயுள்ள ராமநாதபுரம் மேலகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் முருகபெருமாள் (38). இவரது மனைவி மகாலட்சுமி (35). இவர்களுக்கு முத்துசெல்வம், செந்தில்குமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.முருகப்பெருமாள் லாரி டிரைவராக பணிபுரிந்துள்ளார்.கடந்த மூன்று மாதமாக டிரைவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மகாலட்சுமி காளான் உற்பத்தி செய்யும் தொழில் பயிற்சி பெற்று வீட்டின் முன்பு கூரை அமைத்து காளான் உற்பத்தி தொழில் செய்து வந்துள்ளார். மேலும் அருகில் உள்ள பூலாங்குளம் என்ற கிராமத்தில் தையல் கடையும் அதனுடன் சேர்ந்து காய்கறி கடையும் நடத்தி வந்துள்ளார். முருகப்பெருமாள் தொழில் தொடங்குவதாக கூறி கடன் பெற்று பின்பு தொழில் நஷ்டம் ஏற்பட்டதாக அந்தக் கடனை அடைக்காமல் இருந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடனும் மகாலட்சுமி நகையும் அடமானம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த கடனை அடைப்பதற்கு மகாலட்சுமி இரவு பகலாக வேலை செய்துள்ளார். இந்த கடன் பிரச்சினை சம்பந்தமாக கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முருகபெருமாள் தனது செல்போனை கீழே போட்டு உடைத்ததாக கூறப்படுகிறது. பிரச்சனையை அருகில் உள்ளவர்கள் சமாதானப்படுத்தினர். இந்நிலையில் இன்று காலை மகாலட்சுமி சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது மகாலட்சுமி செல்போனை எடுத்து தனது சிம்மை மாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளார் இதனால் மீண்டும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த முருகப்பெருமாள் அரிவாளால் மகாலட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் விரைந்து சென்று, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து முருகபெருமானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :