நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா ஆனித்திருவிழா கொடியேற்றம்!

by Staff / 30-06-2025 09:44:58am
நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா ஆனித்திருவிழா கொடியேற்றம்!

தென் இந்தியாவில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில். இந்த ஆலயத்தில் ஆனித்திருவிழா மிகவும் பிரசித்திபெற்றதாகும்.

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலின் 518-வது ஆனிப் பெருந்திருவிழா, இன்று (ஜூன் 30 ) காலை கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கொடியேற்றத்தில் கலந்து கொண்டனர்.

கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத் தொடர்ந்து, மகா மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர், பிரதான கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருளிய சுவாமி-அம்பாளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. சரியாக காலை 7.30 மணியளவில், மேள தாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத, கம்பீரமான கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அழகிய அலங்காரங்கள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். 

மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்து, நான்கு ரத வீதிகளிலும் உலா வருவார்கள். கோவில் கலையரங்கத்தில் தினமும் மாலை வேளையில் சமயச் சொற்பொழிவுகள், கர்நாடக இசை,  ஆன்மிகக் கருத்தரங்குகள், பக்தி இன்னிசை கச்சேரிகள், புராண நாடகங்கள் எனப் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியும், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுமான தேரோட்டம், வருகிற ஜூலை 8-ஆம் தேதி நடைபெறுகிறது. ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பெரிய தேரான நெல்லையப்பர் தேர் உட்பட மொத்தம் 5 தேர்கள் திருநெல்வேலி நகரில்  ஓடும் . இந்த பிரம்மாண்ட நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுப்பார்கள். கடந்த ஆண்டு தேரோட்டத்தின் போது சுவாமி தேரின் வடம் அறுந்ததால், இந்த ஆண்டு ரூ.6.5 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 1,300 அடி நீளத்தில் புதிய வடம் கயிறு வாங்கப்பட்டுள்ளது.

தேரோட்டத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தேர்கள் சுத்தம் செய்யப்பட்டு, சாரம் கட்டும் பணி, அலங்கார துணிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவில் முன்பு பக்தர்கள் வசதிக்காக பந்தல் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், குழிகளைச் சரிசெய்தல் உள்ளிட்ட சாலை சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலின் உட்புறமும், வெளிப்புறமும் சேர்த்து 147  கேமராக்கள் பொருத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

 

Tags : நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா ஆனித்திருவிழா கொடியேற்றம்!

Share via