மேலூர் அருகே வாகன விபத்தில் காதலன் பலி காதலியின் தந்தை கைது.

by Staff / 18-08-2025 10:34:38am
மேலூர் அருகே வாகன விபத்தில் காதலன் பலி காதலியின் தந்தை கைது.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூதமங்கலம் ஊராட்சி பொட்டபட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(23), இவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டு வந்து சொந்த ஊரில் விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில்  அதே பகுதியில்  ராகவி(25) தனது கணவரும் தாயின் சகோதரருமான  செல்வம் என்பவரை திருமணம் செய்து, கணவர் விபத்தில் இறந்த சூழலில்  இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சதீஷ்க்கும் ராகவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

 இதனை அறிந்த ராகவியின் பெற்றோர்களான அழகர்  - கண்ணாயி மற்றும் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் அவரது சகோதர் ராகுல் ஆகியோர் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர். 

இதனை கேட்காத இருவரும் சமீபத்தில் வெளியூர் சென்று சில நாட்கள் தங்கி உள்ளனர். இந்நிலையில் ராகவியின் தந்தை அழகர் தனது  மகளை காணவில்லை என்று மேலூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த தகவல் அறிந்து இருவரும் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு வந்த தனது மகளை அவரது காதலன் சதீஷ் சந்திக்க முடியாதபடி அவரது பெற்றோர் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சதீஷ் நானும் ராகவியும் திருமணம் செய்து கொண்டோம் எனது மனைவி ராகவியை அவரது பெற்றோர்கள் மறைத்து வைத்துள்ளார்கள். அவரை காணவில்லை என்று மேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்த புகாரைத் தொடர்ந்து மேலூர் மகளிர் காவல் துறையினர் ஒரே சமூகத்தைச் சேர்ந்த அந்த இரண்டு குடும்பத்தினரையும் அழைத்து பேசியுள்ளனர். 

அதில் காதலர்கள் இருவரும் தாங்கள் பிரிய விரும்பவில்லை சேர்ந்து வாழ்கிறோம் என்று கூறவே, இருவரும் திருமணம் செய்து கொள்ளுமாறும். ராகவிக்கு இருக்கும் 2- குழந்தைகளை அவரது பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் ராகவிக்கு அணிவிக்கப்பட்டு இருந்த நகைகளை ராகவியின் பெற்றோரிடம் திரும்ப கொடுத்து விடுவது என்றும் பேசி முடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 இந்நிலையில் காதலர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் நள்ளிரவில் திருச்சி நோக்கி பயணித்துள்ளனர்.
 அப்பொழுது மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலையில் அய்யாபட்டி விளக்கு என்ற பகுதியில் அவர்களது இருசக்கர வாகனம்  சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் வாழ்ந்த வாகனம் அவர்களை இடித்து கீழே தள்ளியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். முகத்தில் படுகாயம் அடைந்த ராகவி முதலில் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
ராகவியின்  வாக்குமூலத்தை தொடர்ந்து கொட்டாம்பட்டி காவல்துறையினர் அவரது தந்தை அழகரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர்.

 

Tags : மேலூர் அருகே வாகன விபத்தில் காதலன் பலி காதலியின் தந்தை கைது.

Share via