வாக்கு எந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னத்துடன், வேட்பாளரின் வண்ணப்படம்.

வாக்கு எந்திரத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. பீகார் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் இந்த மாற்றத்துடன் வாக்கு எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன.
பீகார் மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அங்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருவதுபோல், இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் பணியை மும்முரமாக செய்துவருகிறது.
குறிப்பாக பீகார்மாநிலத்தில் போலி வாக்காளர்களையும், இறந்தவர்களின் பெயர்களையும், குடி பெயர்ந்தவர்களையும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்காக சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொண்டது.
இதில் சுமார் 65 லட்சம் பேர் போலி வாக்காளர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கிடையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவும், தேர்தல் ஆணையமும் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டது என குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு உதாரணமாக மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளையும், கர்நாடகாவில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதியையும் அவர் முன்வைத்தார்.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் வாக்களிப்பதில் மேலும் வெளிப்படைத் தன்மையை கொண்டுவரும் விதமாக தேர்தல் ஆணையம் முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி, வாக்கு இயந்திரத்தில் கட்சியின் சின்னமும், வேட்பாளரின் பெயரும் இடம் பெறும். தற்போது இதில் புதிதாக ஒரு வசதியையும் தேர்தல் ஆணையம் கொண்டுவருகிறது.
அதன்படி வாக்கு எந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னத்துடன், வேட்பாளரின் வண்ணப்படமும் இடம் பெறும். குறிப்பாக வேட்பாளர் பட்டியல் அச்சிட 70 ஜி.எஸ்.எம் தடிமன் கொண்ட இளஞ்சிவப்பு நிறத்தாள் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் வாக்காளர்கள் தங்கள் வேட்பாளரை எளிதில் அடையாளம் கண்டு தங்கள் விருப்பமானவருக்கு வாக்களிக்க முடியும்.
நாட்டில் முதல்முறையாக பீகார்
சட்டமன்றத் தேர்தலில் இந்தத் திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்கிறது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறும் தேர்தல்களிலும் இந்த நடைமுறை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : வாக்கு எந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னத்துடன், வேட்பாளரின் வண்ணப்படம்.