திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்  தெலுங்கானா பக்தர் உயிரிழப்பு.

by Staff / 25-09-2025 11:09:00pm
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்  தெலுங்கானா பக்தர் உயிரிழப்பு.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு மாவட்ட, மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பௌர்ணமி, விசேஷ நாட்களில் இலட்சக்கணக்கான பக்தர்களும், வார விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து விட்டு, கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். 

அண்ணாமலையார் கோவிலில் உள்ள மூலவருக்கு தினமும் ஆறு கால பூஜை நடைபெறுவது வழக்கம், அந்த அபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என உத்தரவு இருந்த நிலையிலும், சில இடைத்தரகர்கள் மூலமாக நேரடியாக பக்தர்கள் கோவிலுக்கு வந்து அதிக பணம் கொடுத்து அபிஷேகத்தில் கலந்து கொள்வர், இதனை அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது வழக்கம்.

இந்நிலையில் இன்று மாலை 6:00 மணிக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் தெலுங்கானா மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியை சேர்ந்த சுரேஷ் 40 என்பவர் தனது தாய் மற்றும் மனைவி குழந்தைகளுடன் அபிஷேகத்தில் கலந்து கொண்டுள்ளார். 

அப்போது 30க்கும் அதிகமானோர் அபிஷேகத்தில் கலந்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அபிஷேகம் முடித்துவிட்டு கருவறையிலிருந்து சுரேஷ் வெளியே வரும்போது மூச்சு திணறல் ஏற்பட்டு  மயக்கம் அடைந்து கீழே சரிந்து விழுந்துள்ளார், உடனடியாக அவருக்கு கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சுரேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து வட்டார் என  தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அபிஷேகத்தில் கலந்துகொண்ட ஒருவர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்  தெலுங்கானா பக்தர் உயிரிழப்பு.

Share via