காவல் நிலையங்களுக்கான புதிய கட்டடங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்...

by Admin / 30-08-2021 01:31:35pm
காவல் நிலையங்களுக்கான புதிய கட்டடங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்...



சென்னை மெரினா, அபிராமபுரம் காவல் நிலையங்களுக்கான புதிய கட்டிடங்கள் இன்று திறக்கப்பட்டது.
 
புதிதாக கட்டப்பட்டுள்ள மெரினா காவல் நிலையத்தின் புதிய கட்டிடம் இன்று திறக்கப்பட்டது. சென்னையிலுள்ள முக்கிய காவல் நிலையங்களுள் மெரினா காவல் நிலையமும் ஒன்று. பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்த மெரினா காவல் நிலைய கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டும் பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடங்கியது.

அதனால் மெரினா காவல் நிலையம் இதுவரை தடயவியல் துறை வளாகத்தில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட காவல் நிலையத்தின் கட்டுமான பணி ஜூலை மாதம் முடிவடைந்து புதிய கட்டிடமானது இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
 
அதனையடுத்து மெரினா காவல் நிலையத்தில் மயிலாப்பூர் காவல்துறை துணை ஆணையர் திஷா மிட்டல், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர்.

இந்த கட்டிடமானது 1 கோடியே 73 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து ஆகிய 3 தனித்தனிப் பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவுகளிலும் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், நிலைய எழுத்தர் அறைகள் மட்டுமல்லாமல் மகளிர் காவலர் ஓய்வெடுக்கும் அறைகள், ஆயுத தளவாடம், கணினி அறைகள், சொத்துக்கள் வைப்பறைகள், கைதிகள் அறைகள், கழிவறைகள் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

இதேப்போல புதிதாக கட்டப்பட்டுள்ள அபிராமபுரம் காவல் நிலையமும் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் காணிலிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடமானது 1 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. அபிராமபுரம் காவல் நிலையத்தின் சட்டம்- ஒழுங்கு பிரிவு, குற்றப்பிரிவு ஆகியவை புதிய கட்டிடத்தில் இன்று முதல் செயல்படத் துவங்கியுள்ளது.

 

Tags :

Share via