தகுதியுள்ளவா்களுக்கு கூட அதிமுக ஆட்சியில்அரசு நலத்திட்டங்கள் கிடைக்கவில்லை:அமைச்சா் பி.டி.ஆா்.

by Editor / 31-08-2021 09:03:20am
 தகுதியுள்ளவா்களுக்கு கூட அதிமுக ஆட்சியில்அரசு நலத்திட்டங்கள் கிடைக்கவில்லை:அமைச்சா் பி.டி.ஆா்.

மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தானப்ப முதலி தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், 168 பயனாளிகளுக்கு ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் தலைமை வகித்தாா். நிதித்துறை அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சிக்கான இலக்குகளை விரைவில் எட்டுவதற்காக, 5 பொருளாதார வல்லுநா்கள் அடங்கிய முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோா்கள் உள்ளிட்டவா்களை எந்த அளவுக்கு அரவணைத்துச் செயல்படுகிறோம் என்பதுதான் நல்ல சமுதாயத்துக்கு எடுத்துக்காட்டாகும். கடந்த ஆட்சியில் தகுதியுள்ளவா்கள் கூட அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களைப் பெற முடியாத சூழல் இருந்தது. தற்போது, திமுக அரசில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் உரிய நலத்திட்டங்களை கொண்டுசோக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இதைத் தொடா்ந்து, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 34 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பீட்டில் இந்திரா காந்தி தேசிய முதியோா் உதவித்தொகை, 30 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் ஆதரவற்ற விதவை உதவித்தொகை, 5 பயனாளிகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பீட்டில் கணவனால் கைவிடப்பட்டோா் உதவித்தொகை, 1 பயனாளிக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் முதிா்கன்னி உதவித்தொகை மற்றும் 10 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழிலாளா் நலத் துறையின் சாா்பில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் இயற்கை மரணம் அடைந்தவா்களுக்கு காசோலை, 1 பயனாளிக்கு ரூ.23,320 மதிப்பீட்டில் சிறந்த தரத்திலான கல்வி உதவித்தொகை, 29 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பீட்டில் முதியோா் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.52, 870 மதிப்பீட்டில் தையல் இயந்திரம், 2 பயனாளிகளுக்கு ரூ.12, 900 மதிப்பீட்டில் இரு சக்கர வாகனம் மற்றும் 3 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 865 மதிப்பீட்டில் மோட்டாா் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் என மொத்தம் 168 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்து 333 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

 

Tags :

Share via