ஜெயலலிதா பெயரில் பல்கலை. அமையக்கூடாது என்பதே திமுகவின் எண்ணம்... மாஜி அமைச்சர் காட்டம்!

by Admin / 31-08-2021 04:52:39pm
ஜெயலலிதா பெயரில் பல்கலை. அமையக்கூடாது என்பதே திமுகவின் எண்ணம்... மாஜி அமைச்சர் காட்டம்!



முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமையக்கூடாது என்பதே திமுக-வின் எண்ணம் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
 
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலை உடன் இணைக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். மேலும் இதனை கண்டிக்கும் வகையில் கலைவாணர் அரங்கம் அமைந்துள்ள வாலாஜா சாலையில் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல்துறையினர் அருகிலுள்ள திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவில் இருக்கும் சமுதாய நலக் கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர். அப்போது செய்தியாளரிடம் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன், விழுப்புரம் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள, ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமிக்கப்பட்டு senate house உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு ஆளுநரால் ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் இருக்கின்ற காரணத்திற்காக அருகில் இருக்கக்கூடிய சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் தீர்மானத்தை திமுக சட்டமானற்றத்தில் கொண்டு வந்துள்ளது. இதனை எதிர்த்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக இந்த செயலை கண்டிக்கும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பாரம்பரியம் மிக்க பெரிய பல்கலைக்கழகம் இதை மேலும் மேம்படுத்துவதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தை அதனுடன் இணைப்பது முறையாகாது. விழுப்புரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கக்கூடிய மாணவர்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தை அரசு அண்ணாமலை பல்கலை உடன் இணைக்க கூடாது.

 

Tags :

Share via