மேற்கு திசை நோக்கி அருள்புரியும் சப்த விநாயகர்கள் எழுந்தருளிய திருக்கண்டியூர் திருத்தலம்

by Editor / 06-09-2021 10:10:47am
 மேற்கு திசை நோக்கி அருள்புரியும் சப்த விநாயகர்கள் எழுந்தருளிய திருக்கண்டியூர் திருத்தலம்

தஞ்சாவூரிலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் திருக்கண்டியூர். இத்தலத்தில் கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீ பிரம்மகண்டீஸ்வரர், அம்பாள் ஸ்ரீ மங்களாம்பிகை.

சிவபெருமானைப் போல் ஐந்து தலைகளுடன் காட்சி தந்த படைக்கும் கடவுளான பிரம்மன் தலைகர்வத்துடன் அலைந்ததால் பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒரு தலையைக் கொய்ந்து, தலைக்கனத்தை அடக்கினார், சிவபெருமான். இந்த நிகழ்வு இத்தலத்தில் நடந்ததாக தலபுராணம் கூறுகிறது.

இங்கு, மேற்குதிசை நோக்கி இறைவன் அருள்புரிய, அம்பாள் தெற்குதிசை நோக்கி எழுந்தருளியுள்ளாள். மூலவர் சந்நிதிக்கு இடதுபுறம் பிரம்மனுக்கு கிழக்குதிசை நோக்கி தனி சந்நிதி உள்ளது. இங்கு அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் பிரம்மனுக்கு அருகில் சரஸ்வதியும் அமர்ந்துள்ளாள். ஆனால், கைகளில் வீணை இல்லை என்பது தனிச்சிறப்பு.

இறைவனையும் அம்பாளையும் தரிசித்துவிட்டு பிரகார வலம் வந்தால் மொத்தம் பதினொரு விநாயகர்களைத் தரிசிக்கலாம். இவர்களில் ஏழு விநாயகர்கள் சப்தவிநாயகர்களாக திருமாளிகைச் சுற்றில் வரிசையாகக்காட்சி தருகிறார்கள். சங்கடஹர சதுர்த்தி மற்றும் விநாயக சதுர்த்தி ஆகிய நாள்களில் இங்கு வந்து, சப்த விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி அர்ச்சித்து வழிபட்டால், ஏழேழு ஜன்மத்தின் பாவங்களிலிருந்தும் விமோசனம் கிட்டும் என்பது ஜதீகம்.

இந்த சப்த விநாயகர்கள் வரிசையாக எழுந்தருளியுள்ள இந்தத் திருமாளிகைச் சுற்றில் இடது புறத்தில் "கல்ப சூரியன்' என்ற திருப்பெயரில் சூரியபகவான், நின்ற கோலத்தில் சுமார் ஆறடி உயரத்தில் காட்சி தருகிறார். அருகில் சந்திரபகவானையும் தரிசிக்கலாம். மேலும் அர்த்தநாரீஸ்வரர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவதையும் தரிசிக்கலாம்.

மேற்கு திசை நோக்கி அருள்புரியும் சப்த விநாயகர்கள் எழுந்தருளியிருக்கும் ஒரே திருத்தலம் திருக்கண்டியூர் ஸ்ரீ பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோயில் என்று போற்றப்படுகிறது. 

 

Tags :

Share via