வாணவேடிக்கையுடன் பாரா ஒலிம்பிக் நிறைவடைந்தது
மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கியது. இதில் அகதிகள் அணி உள்பட 162 நாடுகளைச் சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று 22 வகையான விளையாட்டுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் களம் புகுந்தனர்.
பதக்கப்பட்டியலில் மொத்தம் 86 நாடுகள் இடம் பிடித்தன. முதல் நாளில் இருந்தே முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சீனா 96 தங்கம், 60 வெள்ளி, 51 வெண்கலம் என்று 207 பதக்கத்துடன் முதலிடத்தை ஆக்கிரமித்தது. இங்கிலாந்து 124 பதக்கத்துடன் 2-வது இடத்தை பெற்றது. போட்டியை நடத்திய ஜப்பானுக்கு 13 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என்று 51 பதக்கத்துடன் 11-வது இடம் கிடைத்தது. இந்தியா இதுவரை இல்லாத வகையில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்றுள்ளது. பாராலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வென்றுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 24ஆவது இடத்தில் உள்ளது.
12 நாளாக நடந்து வந்த டோக்கியோ பாராலிம்பிக் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. நிறைவு விழா அங்குள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சி, வாணவேடிக்கை, பாரம்பரிய நடனம், இசை வெள்ளத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. இந்தியா சார்பில் வீராங்கனை அவனி லெஹரா தேசியக் கொடியை ஏந்தி வீல்சேரில் அமர்ந்தபடி உற்சாகமாக வலம் வந்தார். ‘அரிகாட்டோ ‘(ஜப்பான் மொழியில் நன்றி) என்ற வாசகத்தை மெகா திரையில் காண்பித்து விழாவை உணர்வுபூர்வமாக நிறைவு செய்தனர்.
ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டதுடன் பாராஒலிம்பிக் விளையாட்டுக்குரிய கொடி இறக்கப்பட்டு அது 2024-ம் ஆண்டு பாராஒலிம்பிக் நடக்க உள்ள பிரான்ஸ் நாட்டிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. பாரீஸ் மேயர் அன்னி ஹிடால்கோ அதை பெற்றுக்கொண்டார்.
Tags :