விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடுகள் ஏன்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

by Editor / 06-09-2021 06:07:07pm
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடுகள் ஏன்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடத்த கொரோனா தொற்று காரணமாக அனுமதி அளிக்கப்படவில்லை. இது மாநில அரசு தன்னிச்சையாக எடுத்த முடிவு அல்ல. மத்திய உள்துறை செயலாளர் அஜய் பில்லா மாநில அரசுகளுக்கு அறிவுறுத்திய படியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு கடவுளை வைத்து சிலர் அரசியல் செய்ய பார்க்கிறார்கள்’’ என்று அமைச்சர் சேகர்பாபு காட்டமாக தாக்கினார்.

அரசியல் செய்ய எவ்வளவோ வழிகள் உள்ளது. ஆனால் இதுபோன்று மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் செய்ய நினைத்தால் நிச்சயம் தமிழக அரசு அதை அனுமதிக்காது. இங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் கூறியதாவது:

பக்கத்து மாநிலங்களில் கொரோனா தொற்று 30 ஆயிரத்தை தாண்டுகிறது, உயிர் பலி எண்ணிக்கை 100 யை தாண்டுகிறது. அது போல் தமிழகத்திலும் நடைபெறக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இங்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நோய் குணமாக வேண்டுமென்றால் கசப்பு மருந்து சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் அது போல தான் இதுவும்.

ஆனால் இல்லங்களில் களிமண்ணால் ஆன பிள்ளையாரை வைத்து வணங்கி வழிபட்டு அதனை நீர்நிலைகளில் தனித்தனியாகக் கொண்டு சென்று கரைக்கலாம். இவ்வாறான வழிபாட்டை விநாயக பெருமான் ஏற்றுக்கொண்டு நிச்சயம் பொதுமக்களுக்கு நன்மை செய்வார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் தமிழகம் முதல் இடத்தை பெற்றுள்ளது.

தடுப்பூசி பணி

திருக்கோயில்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பரிசோதனை செய்தல், கிருமிநாசினி வழங்குதல், உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்று (6 ந் தேதி) சென்னை பழனியாண்டவர் கோயில், அருள்மிகு வடிவுடை அம்மன் சமேத வேதபுரீஸ்வரர் கோயில், இலந்தை முத்துமாரியம்மன் கோயில், மற்றும் மின்ட் அங்காளம்மன் கோயில், உள்ளிட்ட கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

60 ஆண்டுகளாக திருப்பணிகள் ஏதும் நடைபெறாமல் கோவில் மிகவும் பழுதடைந்துள்ளது. மிகவும் பழமையான இந்த கோயிலை புதுப்பிக்க தொல்லியல் துறையின் அனுமதி பெற்று புனரமைப்பு பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.

 

Tags :

Share via