உதவி ஆணையர் மகளிடமே வம்பு போக்குவரத்து ஏட்டு கைது

by Editor / 09-09-2021 12:28:06pm
உதவி ஆணையர் மகளிடமே வம்பு போக்குவரத்து ஏட்டு கைது

சென்னை அய்யப்பந்தாங்கல் டிரங்க் சாலையில் பிரபல தனியார் நிறுவனத்தின் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மதியம் இளம்பெண்கள் சிலர் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். போரூர் போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் குமரன்(50). இவர் போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கலில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் அந்த ஹோட்டலுக்கு சென்ற போக்குவரத்து தலைமை காவலர் குமரன் வெளியே வாகனங்கள் நிறுத்தப்பட்டது குறித்து கேட்டு ஹோட்டல் ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு தகராறில் ஈடுபட்ட குமரன், சாப்பிட்டு கொண்டு இருந்த இளம்பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் கூச்சலிட்டார்.அங்கு இருந்த ஊழியர்கள், பொதுமக்கள் ஹோட்டலில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக உடனடியாக போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போரூர் எஸ் ஆர் எம் சி இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார், தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த போக்குவரத்து காவலர் குமரனை கைது செய்தனர்.குமரன் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்குவரத்து காவலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளம்பெண் போலீஸ் உதவி கமிஷனரின் மகள் என்று கூறப்படுகிறது. பணி நேரத்தில் போலீஸ் சீருடையில் சென்று இளம்பெண்னிடம் காவலர் ஒருவர் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் உதவி ஆணையர் ஒருவரின் மகள் என்பதும், தனது தோழியுடன் உணவருந்த வந்தபோது இந்த சம்பவம் நடந்தது என்பதும் தெரியவந்துள்ளது.

வேலியே பயிரை மேயும் விதமாக மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலரே, மக்களிடம் அத்துமீறி இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ஒருவர், முதல்வரை வரவேற்க வந்த மாவட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல்ரீதியாக அத்துமீறியதாக கூறப்பட்ட செய்தி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தொடர்ந்து ஒரு சில போலீஸ்காரர்கள் மீது விழும் அவப்பெயர்கள் ஒட்டுமொத்த காவல்துறையையே களங்கப்படுத்தும் விதமாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

 

Tags :

Share via