ஆப்கனில் பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்கக் : தடை

by Editor / 09-09-2021 12:22:43pm
ஆப்கனில் பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்கக் : தடை

ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபின் கடந்த கால ஆட்சியைப் போல் இன்றி, பெண்களுக்கு அதிகமான உரிமைகள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள்.

இதற்கிடையே இடைக்கால அரசு அமைவது குறித்து அமைச்சரவைப் பட்டியலையும் நேற்று தலிபான்கள் வெளியிட்டதிலும் ஒரு பெண் அமைச்சர்கூட இல்லை. இந்நிலையில் பெண்கள் விளையாட்டில் பங்கேற்கவும் தடை விதித்து தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

தலிபான்கள் தீவிரவாத அமைப்பின் கலாச்சாரப் பிரிவின் துணைத் தலைவர் அஹமத்துல்லாஹ் வாசிக் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''பெண்கள் விளையாட்டில் பங்கேற்பது அவசியமில்லை என்று கருதுகிறோம். குறிப்பாக கிரிக்கெட் விளையாடுவது தேவையற்றது. கிரிக்கெட்டில் பெண்கள் பங்கேற்றால் அவர்களின் உடல், முகம் ஆகியவை மூடப்படாது. அனைவரும் பார்க்கும் வகையில் உடல் உறுப்புகள் தெரியக்கூடும். இதுபோன்று பெண்கள் ஆடை அணிவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை.

இன்று இருப்பது ஊடக யுகம். புகைப்படங்கள், வீடியோக்கள் அதிகமாகப் பரவும். அனைவரும் பார்க்கக் கூடும். இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய அரசு இதுபோன்று பெண்கள் ஆடை அணிவதையும், விளையாடுவதையும் அனுமதிப்பதில்லை. இப்போதுள்ள சூழலில் பெண்கள் கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விளையாட்டும் விளையாடுவது பாதுகாப்பானது அல்ல''.

இவ்வாறு வாசிக் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via