2025-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டையும் ஆர்எஸ்எஸ் சென்றடைய வேண்டும்: மோகன் பாகவத்

by Editor / 11-09-2021 02:14:34pm
2025-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டையும் ஆர்எஸ்எஸ் சென்றடைய வேண்டும்: மோகன் பாகவத்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா வரும் 2025-ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. அந்த நாள் கொண்டாடப்படும்போது, ஒவ்வொரு வீட்டையும் ஆர்எஸ்எஸ் அமைப்பு சென்றடைந்திருக்க வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம் தார்பந்த் நகருக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் 3 நாட்கள் பயணமாகச் சென்றுள்ளார். அங்கு ஜார்க்கண்ட், பிஹார் மாநில ஆர்எஸ்எஸ் தலைவர்களைச் சந்தித்து மோகன் பாகவத் பேசவுள்ளார்.

இதற்கிடையே ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துடன் நேற்று நடந்த சந்திப்பில் பல்வேறு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'நாங்கள் அமைப்புக்காக கடினமாகப் பணியாற்ற வேண்டும் என்று மோகன் பாகவத் கேட்டுக்கொண்டார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா 2025-ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது.

அதற்குள் நாட்டில் ஒவ்வொரு வீட்டையும் ஆர்எஸ்எஸ் அமைப்பு சென்றடைய வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் ஆர்எஸ்எஸ் கிளை இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆர்எஸ்எஸ் நிர்வாகியின் வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும், அவர்கள் வாழ்க்கையை எவ்வாறு தேசத்துக்காக அர்ப்பணிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்'' என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, மோகன் பாகவத்துக்கு மாநில பாஜக தலைவர்கள், ஏபிவிபி தலைவர்கள், பாரதி மஸ்தூர் சங்க நிர்வாகிகள், தான்பாத் நகரில் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இன்றும், நாளையும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுடன் மோகன் பாகவத் பல்வேறு ஆலோசனைகளை நடத்த உள்ளார். இந்தச் சந்திப்பின்போது பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100 சிறந்த உறுப்பினர்களை மோகன் பாகவத் சந்திக்க உள்ளார்.

 

Tags :

Share via