டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகல்: விராட் கோலி அறிவிப்பு

by Editor / 17-09-2021 07:01:19pm
டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகல்: விராட் கோலி அறிவிப்பு

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியை உலக புகழின் உச்சிக்கே எடுத்த சென்ற முன்னாள் வீரர் தோனி, கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கிரிக்கெட் உலகின் வல்லரசாக இந்திய அணி திகழ்ந்து வருவதற்கு விராட் கோலியும், அவரது கேப்டன்சியும் தான் முக்கிய காரணம் என்றாலும் விராட் கோலியால், ஐசிசி.,யால் நடத்தப்படும் தொடர்களில் இதுவரை ஒரு கோப்பை கூட வென்று கொடுக்க முடியாதது ஒரு குறையாகவே இருந்து வருகிறது. மேலும் விராட் கோலி கடந்த பல மாதங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தவித்து வருவதாலும் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டு அவரது பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் அது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்துள்ளார். இது குறித்து விராட் கோலி வெளியிட்டுள்ள அறிக்கையில், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி கொள்ள திட்டமிட்டுள்ளேன். பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்திய அணியின் கேப்டனாக என் உச்சபட்ச திறமைக்கு ஏற்றவாறு பணியாற்றி உள்ளேன். எனது கேப்டன் பயணத்தில் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் அவர்கள் இல்லையெனில், கேப்டனாக நான் எதையும் செய்திருக்க முடியாது. எனது அணி வீரர்கள், உதவி பணியாளர்கள், தேர்வுக்குழுவினர், பயிற்சியாளர்கள் மற்றும் இந்தியா வெற்றி பெற பிரார்த்தனை நடத்திய ஒவ்வொருவருக்கும் நன்றி.

டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை எடுக்க ரொம்ப நேரம் தேவைப்பட்டது. எனக்கு நெருக்கமானவர்களான பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, ரோகித் சர்மா உள்ளிட்டோரின் கலந்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளேன். இது தொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோரிடம் பேசியுள்ளேன். இந்திய கிரிக்கெட்டிற்காகவும், இந்திய அணிக்காகவும் என்னால் முடிந்த பணிகளை ஆற்றுவேன். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via