அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு

by Editor / 18-09-2021 07:53:58pm
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, இரண்டாக உடைந்த அதிமுக, மீண்டும் இணைந்தது. அதையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு, சசிகலாவை, தினகரன் உள்பட மன்னார்குடி வகையறாக்களை கட்சியில் இருந்து நீக்கியதுடன், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக தீர்மானத்தை ஏற்று, தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின், 2017 செப்டம்பர் 12-ல் நடத்திய பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுச் செயலாளர் பதவியைக் கலைத்துவிட்டு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எனப் புதியதாக இரு பதவிகளை உருவாக்கி உள்ளனர். பொதுச் செயலாளருக்கான அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக கட்சி விதிப்படி, புதிய பதவிகளை உருவாக்கப் பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லையென்பதால், இது சம்பந்தமாக கட்சி விதிகளில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை ஏற்றுத் தேர்தல் ஆணையம் 2018 மே 4-ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஜெயலலிதா மரணத்தின்போது அமலில் இருந்த விதிகளைப் பின்பற்ற அதிமுக தலைமைக்கு உத்தரவிடத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு திங்கள் கிழமை (செப். 20) தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.

ஏற்கனவே அதிமுக பொதுக்குழு கூட்டம், பொதுக்குழு தீர்மானம் செல்லாது என சசிகலா தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதுபோல அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தொடர்ந்துள்ள வழக்கும் நிலுவையில் உள்ளது 

 

Tags :

Share via

More stories

Logo