ஐஏஎஸ் படிக்க டீ விற்கும் இளம்பெண்.
கொச்சியில் உள்ள காலூர் மைதானத்தில் காலை நடைபயிற்சி செய்பவர்களுக்கு சங்கீதாவின் முகம்
நன்கு தெரியும். அங்கு ஒரு சின்ன கடை அமைத்து தேநீர், பழங்கள், வீட்டிலிருந்து தயார் செய்து கொண்டுவரப்பட்ட உணவுகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறார். கடந்த மார்ச் 2020ஆம் ஆண்டு இளநிலை வணிகவியல் துறையில் தேர்ச்சி அடைந்த சங்கீதாவுக்கு, ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதுதான் கனவு.
இவரது தந்தை சலவை தொழிலாளி என்பதால் தனியாக ஐஏஎஸ் பயிற்சி வகுப்புக்கு சென்று படிக்கும் அளவிற்கு அவரின் குடும்பச்சூழல் இல்லை. எனவே, பகுதி நேரமாக தேநீர் விற்பது போன்றவற்றால் வருமானம் ஈட்டி வருகிறார். இதில் பெற்ற வருமானத்தை சேமித்து வைத்து, தற்போது திருச்சூரில் உள்ள குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் சேர இருக்கிறார்.
தகவலை அறிந்த அம்மாவட்ட ஆட்சியர் ஜாபர் மாலிக், சங்கீதாவின் கடைக்கு வருகை தந்துள்ளார். சங்கீதாவின் பயிற்சிக்கு தேவையான உதவியை அளிப்பதாக உறுதியளித்த அவர், ஹெலன் கெல்லரின் புத்தகத்தை அவருக்கு பரிசளித்தார். மேலும், சங்கீதாவின் பெற்றோருக்கு, சங்கீதாவின் படிப்பு குறித்து நம்பிக்கை அளித்து உரையாடினார்.இதுகுறித்து, சங்கீதா கூறுகையில்," மாவட்ட ஆட்சியர் எனது கடைக்கு வருவார் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மாவட்ட ஆட்சியர் அளித்த ஊக்கம், எனது கனவை நோக்கி செல்ல பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது" என்றார்.
Tags :