முதலமைச்சர் வீட்டின் முன் தீக்குளித்த நபர்

by Editor / 27-09-2021 05:10:08pm
முதலமைச்சர் வீட்டின் முன் தீக்குளித்த நபர்


 

கடம்பூர் ராஜு எம்எல்ஏ என்னை கொலை செய்ய கூலிப்படைக்கு பணம் கொடுத்துள்ளார் என முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன் தீக்குளித்த நபர் தனது அறிக்கையில் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.


சென்னை: தேனாம்பேட்டை செனடாப் சாலையிலுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டின் முன்பு 
(செப். 27) காலை 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பிவைத்தனர்.


 அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அவர் தென்காசியைச் சேர்ந்த வெற்றிமாறன் என்பதும், தமிழ்நாடு பறையர் பேரவையின் தலைவராக இருந்து வருவதும் தெரியவந்தது.மேலும் உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட மனு அளித்த அவரை சிலர் மிரட்டி வாபஸ் பெற வைத்ததாகவும், இது குறித்து முதலமைச்சரை சந்தித்து முறையிட சென்றதாகவும், அவரை சந்திக்க முடியாததால் வெற்றிமாறன் தீக்குளிக்க முயன்றதாகவும் தெரியவந்துள்ளது.


இந்தநிலையில், தமிழ்நாடு பறையர் பேரவை தலைவராக உள்ள வெற்றிமாறன் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் செய்தோம். தற்போது குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட ஜமீன்தேவர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட கடந்த செப்.22 ஆம் தேதி குருவிகுளம் யூனியனில் பிரபு என்ற அதிகாரியிடம் வேட்புமனு அளித்தேன்.எனக்கு எதிராக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் பாலகிருஷ்ணன், பண வெறியில், சாதிய வெறியில் அவரிடம் வேலை செய்யும் எந்தவித அடிப்படை தகுதியும் இல்லாத ராமசாமி என்பவரை மனுத்தாக்கல் செய்த வைத்தார்.


தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பிரபு, கருப்பசாமி ஆகியோர் பாலகிருஷ்ணனிடம் பல லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு என்னுடைய மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.


இது குறித்து பாலகிருஷ்ணனிடம் கேட்டதற்கு எனது சாதி பெயரைக் கூறி கொலை மிரட்டல் விடுகிறார். கடம்பூர் ராஜு எம்எல்ஏ தரப்பில் இருந்து என்னை கொலை செய்ய கூலிப்படைக்கு ரூ. 20 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.ஆகவே இதை தடுத்து நிறுத்த வேண்டும். எனது வேட்புமனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும். ராமசாமியின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இது குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி தேர்தல் அலுவலர்கள், கடம்பூர் ராஜு எம்எல்ஏ மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via