ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடைகோரிய வழக்கு தள்ளுபடி

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.
மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஏராளமான இளைஞர்களும், குழந்தைகளும் அடிமையாகி உள்ளனர். இதன் காரணமாக மனநல பிறழ்வு, நடத்தை மாற்றம், சமூக மற்றும் தனிநபர் வாழ்க்கை முறையில் மாற்றம் ஆகிய பிரச்னைகள் எழுகின்றன. இதன் காரணமாக இளைஞர்கள் பலர், தற்கொலை செய்து கொள்ளும் சூழலும் அதிகரித்து வருகிறது. ஆகவே, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி துரைசுவாமி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'இது தனிநபர் ஒழுக்கம் சார்ந்தது. மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்து நிவாரணம் தேடியிருக்கலாம். அவ்வாறின்றி மனுத்தாக்கல் செய்தது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் உள்ளது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்
Tags :