வயலில் இறங்கி பெண்களிடம் குறை கேட்டார் ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க செல்லும் வழியில், கே.நாட்டப்பட்டி கிராமத்தில், வயலில் இறங்கி நாற்று நடவு செய்து கொண்டிருந்த விவசாயப் பெண்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
முதலமைச்சர் திடீரென காரை நிறுத்தி வயலுக்கு நடந்து வந்ததை பார்த்ததும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்களிடம் முதலமைச்சர் குறைகளை கேட்டார். பெண்கள் அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை சொன்னார்கள். அதனை உடனடியாக நிறைவேற்றி தருவதாக முதலமைச்சர் உறுதி கூறினார்.முதலமைச்சர் வெளியூர்களுக்கு செல்லும் போது ஆங்காங்கே திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் சேலம், தர்மபுரி சென்ற போது போலீஸ் நிலையத்துக்கும், ஆதிதிராவிட மாணவர் விடுதிக்கும் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கிராம சபை கூட்டத்தில் சிறிய மேடையில் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டு மக்களின் குறைகளை விவரமாக கேட்டார்.பின்னர் மதுரை வந்த மு.க.ஸ்டாலின் மேலமாசி வீதியில் உள்ள மகாத்மா காந்தி மேலாடையை துறந்த இடத்துக்கு சென்றார். அங்கு காந்தி ஜெயந்தி தினமான இன்று காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் கதர் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.
Tags :