கே.பாலகிருஷ்ணின் விழுப்புரம் பேச்சு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் ஜனவரி 3- ஆம் தேதி நடைபெற்றது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்வை அரசியல் செய்ய பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்ல, நாட்டின் எந்த பகுதியிலும்பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழும் போது அதற்கு எதிராகப் போராடும் இயக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருந்து வருகிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்வை அரசியலாக்கும் செயலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈடுபடுகிறார். ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த போது, அரசை எதிர்த்து போராடினாரா?, அப்போது எங்கே சென்றிருந்தார் அவர்.
பாஜக- ஆர்எஸ்எஸுக்கு எதிராக, பாசிச ஆட்சிக்கு எதிராக திமுகவுடன் இணைந்து நாங்கள் போராடி வருகிறோம். இந்தியா கூட்டணியில் இணைந்து பயணிக்கிறோம். அதே நேரத்தில் தமிழகத்தில் பட்டா கேட்டு போராடினால், தொழிலாளர்கள் உரிமைக்காக போராடினால் உடனடியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர்.மரியாதைக்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப் படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல் படுகிறது? போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா?’ எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும்" என கேட்டார்.இது தான் இன்றைய அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.இதற்குதான் முரசொலியில் கட்டுரையும் கண்டனம் தெரிவித்து வெளியாகியுள்ளது.
Tags : கே.பாலகிருஷ்ணின் விழுப்புரம் பேச்சு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலை: