ரூ 2. கோடி இடத்தை அபகரித்து மோசடி:  3 பெண்கள் உட்பட 7 நபர்கள் கைது

by Editor / 09-10-2021 03:29:52pm
ரூ 2. கோடி இடத்தை அபகரித்து மோசடி:  3 பெண்கள் உட்பட 7 நபர்கள் கைது

ஸ்ரீபெரும்பத்தூர் தாலுகா, தண்டலம் கிராமத்தில் ரூ 2. கோடி மதிப்புள்ள இடத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்து மோசடி செய்த 3 பெண்கள் உட்பட 7 நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


ஸ்ரீபெரும்பத்தூர் தாலுகா, தண்டலம் கிராமத்தில் 33 சென்ட் நிலத்தை லீலாகுமாரி என்பவர் தனது கணவரிடமிருந்து செட்டில்மென்ட் மூலம் 2010-ம் வருடம் பெற்றுள்ளார். அந்த சொத்தை தனது அனுபவத்தில் வைத்திருந்தார். தனக்கு சொந்தமான அந்த சொத்தை பராமரிக்க வேண்டி ஜாபர் சாதிக் பாஷா என்பவருக்கு 2015ம் ஆண்டு பொது அதிகார பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார்.


 பொது அதிகாரம் பெற்ற ஜாபர் சாதிக் பாஷா ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாததால் அந்த பொது அதிகார பத்திரத்தை அதே வருடமே லீலாகுமாரி ரத்து செய்துள்ளார். இந்நிலையில் ஜாபர் சாதிக் பாஷா லீலாகுமாரியின் சொத்தை அபகரிக்க திட்டமிட்டுள்ளார்.லீலாகுமாரியை போல் வேறு ஒரு நபரை ஆள்மாறாட்டம் செய்து 2021ம் ஆண்டு போலியான பொது அதிகார பத்திரத்தை மயிலாப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஜாபர் சாதிக் பாஷா தன் பெயரில் பதிவு செய்துள்ளார். அந்த போலி பத்திரத்தை அடிப்படையாக வைத்து விருகம்பாக்கத்தை சேர்ந்த சிவமணி என்பவருடன் கூட்டு சேர்ந்து கிரைய ஒப்பந்தம் பத்திரத்தை பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து புகார்தாரருக்கு சொந்தமான ருபாய் 2 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்துள்ளார். 


இது தொடர்பாக லீலாகுமாரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில் நில அபகரிப்புத் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஜாபர்சாதிக் பாஷா லீலாகுமாரியின் சொத்தினை போலி ஆவணம் மூலம் அபகரித்தது உண்மை என தெரியவந்தது.

அதனையடுத்து இந்த மோசடியில் ஈடுபட்ட விருகம்பாக்கத்தைச் சேர்ந்த உஷா சக்திவேல் (37), சிவமணி (38), கீழ்பாக்கத்தைச் சேர்ந்த அன்பழகன் (43), பட்டாளம் பகுதியை சேர்ந்த முகம்மது அப்சர் (32), விருகம்பாக்கம் வேம்புலி (48), எம்.ஜி.ஆர் நகர் ஜெயலட்சுமி (59), ஷெனாய் நகர் சுமதி சக்திவேல் (52) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்பு அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
 

 

Tags :

Share via

More stories