800 கிலோ கெட்டுப்போன கன்றுக்குட்டி இறைச்சி பறிமுதல்

சென்னை வேப்பேரி போலீஸ் நிலையம் சிக்னல் அருகே நேற்று காலை வந்த சரக்கு வாகனம் ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், அதில் இறைச்சி வைக்கப்பட்டு இருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில், அதிகாரிகள் என். ராஜா உள்ளிட்டோர் அடங்கிய குழு மற்றும் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது வாகனத்தில் 800 கிலோ கன்றுக்குட்டி இறைச்சி இருப்பதும், அவை கெட்டுப்போய் இருந்ததும் தெரியவந்தது.இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 800 கிலோ இறைச்சி கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது.இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறுகையில், “பிடிபட்ட கெட்டுப்போன இறைச்சி நகரின் எந்தெந்த பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இது போன்ற சம்பவங்கள் தெரியவரும் பட்சத்தில் 9444042322 என்ற எண்ணில் உணவு பாதுகாப்பு துறைக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்” என்றார்.
Tags :