6-வது நினைவு நாள்: அப்துல் கலாம் மணிமண்டபத்தில் குடும்பத்தினர், கலெக்டர் மலரஞ்சலி

by Admin / 27-07-2021 03:27:11pm
6-வது நினைவு நாள்: அப்துல் கலாம் மணிமண்டபத்தில் குடும்பத்தினர், கலெக்டர் மலரஞ்சலி


   
அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைத்தது.

6-வது நினைவு நாள்: அப்துல் கலாம் மணிமண்டபத்தில் குடும்பத்தினர், கலெக்டர் மலரஞ்சலி
ராமேசுவரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சமாதியில் கலெக்டர், கலாம் குடும்பத்தினர் மலரஞ்சலி செலுத்தினர் ராமேசுவரம்:

முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம், உலக புகழ் பெற்ற புண்ணிய தலமான ராமேசுவரத்தில் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பாதுகாப்பு துறையில் பணியாற்றி அணுகுண்டு சோதனை, செயற்கைகோள் வடிவமைத்தல், அக்னி ஏவுகணை உருவாக்குவதில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.

 மாணவர்களின் எழுச்சி நாயகனாகவும், இளைஞர்களின் கனவு நாயகனாகவும், இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதை குறிக்கோளாக கொண்டு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தினார்.

2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடும்போது அப்துல்கலாமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவரது உடல் ராமேசுவரத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு, இளைஞர்களும் மாணவர்களும் உள்பட லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவரது உடல் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பேய்க்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது நினைவைப் போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைத்தது. அந்த நினைவிடத்தில் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்து வாசகங்கள் அமைக்கப்பட்டும், அவர் பயன்படுத்திய உடைமைகளும் வைக்கப்பட்டு உள்ளன.

இன்று அப்துல் கலாமின் 6-ம் ஆண்டு நினைவு தினம் ஆகும். இதையொட்டி ராமேசுவரம் மணிமண்டபத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. மணிமண்டபத்தின் வெளிப்பகுதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அவரது சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை கலெக்டர் சந்திரகலா, போலீஸ் டி.ஐ.ஜி. மயில் வாகணன், சூப்பிரண்டு கார்த்திக், ராமநாதபுரம் எம.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம், கைத்தறி வாரியத்தலைவர் குப்புராமு, மத்திய கடல் மீன் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் முரளிதரன் மற்றும் உள்ளிட்ட பலர் அப்துல்கலாம் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து அப்துல் கலாமின் குடும்பத்தினர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள், அப்துல்கலாம் பேரன்கள் சேக் சலீம், ஷேக் தாவூத், அண்ணன் மகள் நசீமா மரைக்காயர், நடிகர் தாமு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். கூட்டு பிரார்த்தனையும் நடந்தது.

 

Tags :

Share via