திருவனந்தபுரம் -கன்னியாகுமரி இடையே 5 ரெயில்கள் ரத்து

by Editor / 14-02-2023 08:05:45am
திருவனந்தபுரம் -கன்னியாகுமரி இடையே 5 ரெயில்கள் ரத்து

திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இடையே இரட்டை ரெயில் பாதை மற்றும் பாலங்கள் கட்டும் பணி இன்று முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறுவதால் தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் கோட்ட அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -


திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இடையே இரட்டை ரெயில் பாதை மற்றும் பாலங்கள் கட்டும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது. 

இதனால் கீழ்கண்ட ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதன்படி இன்றும் (செவ்வாய்க்கிழமை) நாளையும் (புதன்கிழமை) கொல்லம் ஜங்ஷனில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் மெமு எக்ஸ்பிரஸ் ரெயிலும், அதே போல் கன்னியாகுமரியில் இருந்து கொல்லம் ஜங்ஷன் செல்லும் மெமு எக்ஸ்பிரஸ் ரெயிலும், புனலூரில் இருந்து நாகர்கோவில் ஜங்ஷன் வரும் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலும், கன்னியாகுமரியில் இருந்து புனலூர் செல்லும் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலும், திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து நாகர்கோவில் ஜங்ஷன் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.

இதே போல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) புனலூரில் இருந்து நாகர்கோவில் ஜங்ஷன் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும், கன்னியாகுமரியில் இருந்து புனலூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும், 17-ந்தேதி புனலூரில் இருந்து நாகர்கோவில் ஜங்ஷன் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும், கன்னியாகுமரி-புனலூர் செல்லும் ரெயில், திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து நாகர்கோவில் ஜங்ஷன் வரும் ரெயில் ஆகியவையும் ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில் ஜங்ஷனில் இருந்து மங்களூரு சென்டிரல் செல்லும் எரனாடு எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். இந்த ரெயில் நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து திருச்சி செல்லும் இன்டர்சிட்டி சூப்பர் பாஸ்ட் ரெயிலும், திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் வரும் ரெயிலும் இன்று முதல் 17-ந்தேதி வரை இரு மார்க்கமாகவும் ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில் ஜங்ஷனில் இருந்து கோட்டயம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று, நாளை மற்றும் 17-ந்தேதி கொல்லத்தில் இருந்து இயக்கப்படும். இந்த ரெயில் நாகர்கோவில்-கொல்லம் இடையே ரத்து செய்யப்படுகிறது. 16-ந்தேதி திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயத்துக்கு இயக்கப்படும்.

கன்னியாகுமரியில் இருந்து கே. எஸ். ஆர். பெங்களூரு செல்லும் ஐலேண்டு எக்ஸ்பிரஸ் ரெயில் 14 மற்றும் 17-ந்தேதி திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும். கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

புனே ஜங்ஷனில் இருந்து கன்னியாகுமரி வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை பாறசாலை வரை இயக்கப்படும், பாறசாலை-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது.

கே. எஸ். ஆர். பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரிக்கு இன்று, நாளை மறுநாள் இயக்கப்படும் ஐலேண்டு எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் வரை இயக்கப்படும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via