இரவு நேர பாதுகாப்பு பணி கவனக்குறைவால் :ஏடிஎம் கொள்ளை; 2 உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோயில் 10ஆவது தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதேபோன்று தேனிமலை மற்றும் போளூர் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மேலும், கலசபாக்கம் பகுதியில் உள்ள இந்தியாஒன் ஏ.டி.எம்.மையத்திலும் இயந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 4 ஏ.டி.எம்.மையங்களிலும் மொத்தம் ரூ 80 லட்சம் வரை கொள்ளை போனதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர் பயன்படுத்திய கார் மற்றும் அதிலிருந்து இறங்கிச் செல்லும் நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியானது.
கொள்ளையர்கள் தங்கள் கைரேகை மற்றும் வீடியோ பதிவை காவல்துறையினர் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதற்காக ஏடிஎம் இயந்திரம் மற்றும் சிசிடிவி உள்ளிட்டவற்றை தீ வைத்து எரித்து சென்றுள்ளனர். அடுத்தடுத்து நான்கு இடங்களில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளை அடித்து பின்னர் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை தீ வைத்து எறித்துச் சென்றுள்ளனர். இதில் ஏடிஎம் மையத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின.
இதனையடுத்து வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து கொள்ளையில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மேலும் வேலூர் வழியாக, ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட டாடா சுமோ காரை கொள்ளையர்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வேலூர் வழியாக ஆந்திரா செல்லும் சாலைகளில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அதே போல ஆந்திரா , கர்நாடகா மாநில எல்லைகளிலும் போலீசார் நேற்று நள்ளிரவு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கொள்ளையர்களை அடையாளம் கண்டுவிட்டதாகவும், அவர்களை தனிப்படை போலீசார் விரைந்து பிடித்து விடுவதாகவும் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்த நிலையில் ஹரியானா மாநிலம் நூக் மாவட்டம் மேவாட் என்ற பகுதியை சார்ந்த கொள்ளை கும்பல்தான் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொள்ளை கும்பல் கண்டெய்னர் லாரிகளில் திருடப்பட்ட கார்களுடன் ஆந்திர மாநிலத்தை கடந்து சென்றுள்ளது. இதனால் கொள்ளையர்கள் வாகனம் குறித்து ஆந்திரா தெலங்கானா எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றபோது இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை எனக்கூறி, திருவண்ணாமலை நகர எஸ்.எஸ்.ஐ. மோகன், தலைமை காவலர் வரதராஜன், போளூர் எஸ்.எஸ்.ஐ. தட்சிணாமூர்த்தி, எஸ்.ஐ. அருள் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், கலசப்பாக்கம் சிறப்பு உதவி ஆய்வாளர் பலராமன் மற்றும் தலைமை காவலர் சுதாகர் ஆகியோரையும், திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து, வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
Tags :