பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் கூடியதால் திணறியது திருவண்ணாமலை.

by Editor / 24-04-2024 09:58:19am
 பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் கூடியதால் திணறியது திருவண்ணாமலை.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களிலும் பல விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவம் விழா, ஆனி மாதத்தில் ஆனி பிரம்மோற்சவ விழா, ஆடி பிரம்மோற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, தை மாதத்தில் உத்தராயன புண்ணிய காலம் என ஆண்டு தோறும் பல்வேறு பிரம்மோற்சவங்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் விமர்சையாக நடைபெறும்.

திருவண்ணாமலையில் ஆண்டிற்கு ஒரு முறை வரும் சித்ரா பௌர்ணமி நேற்று அதிகாலை 04:16 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5:47 மணிக்கு நிறைவு அடைந்தது. சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்காக பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நேற்று அதிகாலை முதல் இரவு விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டனர். 

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக 2500 சிறப்பு பேருந்துகளும் ஆறு சிறப்பு ரயில்களும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இயக்கப்பட்டது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

குறிப்பாக இன்று அதிகாலை 05:47 மணிக்கு  சித்ரா பௌர்ணமி நிறைவடைந்தது. நேற்று அதிகாலை முதல் விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல ஏதுவாக திருவண்ணாமலையில் ரயில் நிலையத்தில் விடியற்காலை முதல் குவிந்தனர். ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மக்கள் தலையாகவே இருந்த நிலையில் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் ரயில் திருவண்ணாமலை வந்தடைந்தது. சித்ரா பௌர்ணமி கிரிவலம் முடித்து ரயில் நிலையத்தில் காத்திருந்த ஏராளமான பயணிகள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டும், முண்டியடித்து கொண்டும் ரயிலில் ஏறினர். ரயில் புறப்பட்டு சென்றும் ஏராளமான பக்தர்கள் அடுத்து வரும் ரயிலுக்காக காத்திருக்கும் சூழலும் நிலவியது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் கூடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பும் நிலவியது. 


 

 

Tags :  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் கூடியதால் திணறியது திருவண்ணாமலை.

Share via