அதிமுக சட்டப்பேரவை கொறடா,  துணைத் தலைவர் பதவி யாருக்கு ?

by Editor / 12-06-2021 04:40:18pm
அதிமுக சட்டப்பேரவை கொறடா,  துணைத் தலைவர் பதவி யாருக்கு ?



அதிமுகவில் சட்டப்பேரவை துணைத் தலைவர் மற்றும் கொறடா ஆகிய பதவிகளுக்கு மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 65 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக, தமிழக சட்டப்பேரவையின் பிரதான எதிர்கட்சியாக இருந்து வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேலாகியும் அதிமுகவின் சட்டப்பேரவை துணைத் தலைவர் மற்றும் கொறடா பதவிகள் நிரப்பப்படாமல் இருந்து வருகிறது. காரணம்,இந்தப் பதவிக்கு பல்வேறு மூத்த தலைவர்கள் போட்டியிடுவதுதான்.
இந்த நிலையில், அதிமுகவின் கொறடா மற்றும் துணைத் தலைவர் பதவிகளை நிரப்புவதற்காக வரும் 14ம் தேதி நண்பகல் 12 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொறடா மற்றும் துணைத்தலைவர் பதவி நிரப்பப்படுகிறது.
கொறடா பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ்பாண்டியன் ஆகியோர் போட்டியில் இருப்பதாகவும், துணைத் தலைவர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன், வைத்திலிங்கம், நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் போட்டியிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

Tags :

Share via