செப்.12-ல் நீட் தேர்வு -ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு

by Editor / 12-07-2021 07:13:46pm
செப்.12-ல் நீட் தேர்வு -ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு


மருத்துவ படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந்தேதி நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த ஆண்டு ஆகஸ்டு 1-ந்தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நீட் தேர்வுக்காக விண்ணப்பம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்படாமல் இருந்தது. கொரோனாவின் தாக்கம் அதிகரித்திருந்ததால் நீட் தேர்வை சிறிது நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் இருந்து சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன.
 இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான அறிவிப்பு  வெளியாகி உள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் செப்டம்பர் 12-ல் நீட் தேர்வு நடத்தப்படும் என்றுஒன்றிய  கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். 
‘தேர்வில் சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக நீட் தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை 155ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்படும். தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் இந்த ஆண்டு அதிகரிக்கப்படும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையானது, செவ்வாய்  மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமையின் இணையதளம் மூலம் தொடங்கும்’ என்றும் கல்வித்துறை மந்திரி தெரிவித்தார்.

 

Tags :

Share via