மின்னல் தாக்கியபோது செல்பி எடுத்த 11 பேர் பலி

by Editor / 12-07-2021 07:02:58pm
மின்னல் தாக்கியபோது செல்பி எடுத்த 11 பேர் பலி


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். 
மழை பெய்து கொண்டிருந்தபோது மிக உயரமான கண்காணிப்புக் கோபுரத்தின் மீதிருந்து அவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அந்தக் கண்காணிப்புக் கோபுரமானது 12 நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரபலமான சுற்றுலா தலமான அமர் கோட்டையில் உள்ளது.மின்னல் தாக்கிய நேரத்தில் 27 பேர் அந்த கண்காணிப்புக் கோபுரத்தின் மீது இருந்துள்ளனர். மின்னல் தாக்கியதும் கோபுரத்தில் இருந்து பலர் கீழே குதித்துள்ளனர். அதில் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.,இந்தியாவில் மின்னல் தாக்கி சராசரியாக ஆண்டுக்கு 2 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.
கண்காணிப்புக் கோபுரத்தின் மீது மின்னல் தாக்கியதில் இறந்துபோன பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.இந்தப் 11 பேர் தவிர, ஞாயிறன்று மட்டும் ராஜஸ்தானின் வெவ்வேறு பகுதிகளில் மேலும் 9 பேர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலோட் அறிவித்துள்ளார்.இந்தியாவில் இது மழைக்காலம். கனமழை பெய்யும். வழக்கமாக ஜூன் முதல் செப்டம்பர் வரை இது நீடித்திருக்கும்.
1960-களில் இருந்ததை விட இப்போது மின்னல் தாக்குவதால் ஏற்படும் உயிரிழப்புகள் இரண்டு மடங்காகி விட்டதாக இந்திய வானியல் ஆய்வு மையம் கூறுகிறது. பருவநிலை மாற்றமும் இதற்கு ஒரு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
1990-களைவிட 30 முதல் 40 சதவிகிதம் வரை மின்னல் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2018-ஆம் ஆண்டு தென் மாநிலமான ஆந்திராவில் 13 மணி நேரத்துக்குள்ளாக 36,749 மின்னல் தாக்கிய நிகழ்வுகள் நடந்தன.
குறைந்த அளவு மரங்கள் இருக்கும் பகுதிகளில் மின்னல்கள் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதால், அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது என அதிகாரிகள் கூறுகின்றன.

 

Tags :

Share via