முல்லைப் பெரியாறு பாசன கால்வாய்கள் முறையாக சீரமைக்கப்படவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு.

by Editor / 14-09-2024 10:00:18pm
முல்லைப் பெரியாறு பாசன கால்வாய்கள் முறையாக சீரமைக்கப்படவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதி முல்லைப் பெரியாறு அணையின் ஒருபோக பாசன  பகுதி ஆகும். இதன் மூலம் சுமார் 85 ஆயிரத்து 563 ஏக்கர் நிலப்பரப்புகள் பாசன வசதி பெறுகின்றன. அதன்படி ஆண்டுதோறும் செப்டம்பர் 15ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் போதிய நீர் இருப்பு இருந்தால் ஒருபோக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

அதன்படி தற்பொழுது அணையில் போதிய நீர் இருப்பு இருப்பதன் காரணமாக வைகை அணையில் இருந்து நாளை பெரியாறு ஒரு போக பாசனத்திற்காக மேலூர் பகுதி மற்றும் திருமங்கலம் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வினாடிக்கு 1130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு சுமார் 8,461 மில்லியன் கன அடி தண்ணீர் நாளை முதல் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் முல்லைப் பெரியாறு ஒருபோக பாசனப்பகுதிகளான மேலூர் மற்றும் திருமங்கலம் பகுதிகளில் சுமார் 1 லட்சத்து 5000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிகள் பெறுகின்றன. வைகையிலிருந்து ஒரு போக பாசனத்திற்காக நாளை திறக்கப்படும் தண்ணீர் நாளை மறுநாள் மாலைப் பொழுதுக்குள் மேலூர் புலிப்பட்டி பகுதியை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மேலூர் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன பிரதான கால்வாய்கள் மற்றும் பிரிவு கால்வாய்களில்  பராமரிப்பு பணிகள்  மந்த நிலையில் நடப்பதாகவும், கல்லம்பட்டியில் இருந்து பதினெட்டாங்குடி வரை செல்லும் 11வது பிரிவு கால்வாயில் முட்புதர்கள் பெருகி இருப்பதாகவும்ம் இதுவரை அவை அகற்றப்படவில்லை என்றும் அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தண்ணீர் வருவதற்கு முன்பாக முட்புதர்களை அகற்றி கால்வாய்களை சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : முல்லைப் பெரியாறு பாசன கால்வாய்கள் முறையாக சீரமைக்கப்படவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு.

Share via