1228 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், 5 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500 - மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கான காசோலைகளையும் வழங்கினார். மேலும், பணிக்காலத்தில் உயிரிழந்த 4 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலிலுள்ள அனைவருக்கும் உதவி உபகரணங்கள் வழங்கும் பொருட்டு 2021- 22ஆம் ஆண்டிற்கு ரூ.62.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று 1.9.2021 அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கையின் மீதான பதிலுரையின் போது அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2020- 2021ஆம் ஆண்டில், உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் இருந்த 10,107 மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், ரூ.21.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அக்காத்திருப்போர் பட்டியலில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி விண்ணப்பித்த 1,228 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கிடும் விதமாக, முதலமைச்சர் இன்று 5 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கான சாவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆர். லால்வேனா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags :