ஏ.சி. மின் கசிவால் தீ விபத்து: மனைவியுடன் தொழில் அதிபர் கருகி பலி
ஏசி-யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, தூங்கி கொண்டிருந்த மதுரை தொழில் அதிபர், அவரது மனைவி இருவரும் தீயிலேயே கருகி உயிரிழந்தனர்.
மதுரை ஆனையூர் அருகே உள்ளது எஸ்விபி நகர் பகுதியில் சோப் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார் சக்திகண்ணன். மனைவி பெயர் காவியா. இந்தத் தம்பதிக்கு 17வயதில் காவியா என்ற மகளும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளனர்.
மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் எஸ்விபி நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார் சக்தி கண்ணன். இந்நிலையில் பிள்ளைகள் இருவரும் கீழே உள்ள அறையில் தூங்க சென்றனர். மாடியில் உள்ள அறையில் தம்பதி இருவரும் இரவு உறங்கியுள்ளனர். அதிகாலை அந்த அறையின் ஏசியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு புகை வெளிவர ஆரம்பித்துள்ளது. சிறிது நேரத்தில் அந்த அறை முழுக்க புகை சூழ்ந்துவிட்டது. அந்த வீட்டின் மாடியில் இருந்து கரும்புகை வருவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி குழந்தைகளை எழுப்பினர். மாடியிலிருந்து கரும்புகை வந்து கொண்டிருந்தது.
உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைவாக வந்து மாடியில் உள்ள அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சக்தி கண்ணன் மற்றும் அவரின் மனைவி 2 பேருமே தீயில் கருகி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
புகை வந்த உடனேயே தம்பதி இருவரும் கதவை திறந்து வெளிவர முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை.கதவு பூட்டியிருந்ததால், அவர்களின் அலறல் சத்தம் வெளியில் கேட்கவில்லை. இதனால் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். கூடல் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
Tags :