இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம்.

by Editor / 09-12-2024 07:12:02am
இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (டிச.09) கூடுகிறது. கடந்த ஜூன் 29-ல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. 6 மாதங்களுக்குள் மீண்டும் பேரவை கூட்டப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெற உள்ள கூட்டத்தில்,

முதலாவதாக, முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது. தொடர்ந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எஸ்.பத்மநாபன், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், டாடா நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா, முன்னாள் தலைமைச் செயலர் பி.சங்கர், முரசொலி செல்வம் ஆகியோரின் சிறப்பியல்புகள் தீர்மானமாக வாசிக்கப்பட்டு, அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது.

அதைத்தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. பின்னர், முக்கிய மசோதாக்கள் இருந்தால் அரசால் தாக்கல் செய்யப்படும்.

இரண்டாவது நாளான நாளை (டிச.10), காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெற உள்ளது. கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம், பதிலுரை மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும். நிதி ஒதுக்க சட்ட மசோதாக்களும், ஏனைய பிற மசோதாக்களும் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.மேலும், 9 மாவட்டங்களைத் தவிர்த்து, 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் டிச. 31-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத் தொடர் முடிந்த பின், பேரவையை தேதி குறிப்பிடாமல் அவைத் தலைவர் ஒத்திவைப்பார். அதன்பிறகு, பேரவை கூட்டத் தொடரை முடித்து வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பிப்பார். 2025-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டின் முதல் கூட்டத் தொடரை தனது உரையுடன் ஆளுநர் தொடங்கி வைப்பார். இதற்கான உத்தரவு ஜனவரி மாதம் வெளியிடப்படும்.

 

Tags : தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது.

Share via