சிவகளை அகழாய்வில்  ஆச்சரியம் !

by Writer / 02-10-2021 06:30:55pm
சிவகளை அகழாய்வில்  ஆச்சரியம் !

 

தமிழ்நாடு சிவகளை அகழாய்வில்தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை தற்போது கீழடி தொகுப்பு, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை நடத்திவருகிறது.2015ஆம் ஆண்டிலிருந்து மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடந்துவரும் தொல்லியல் ஆய்வுகளில் வெளிப்பட்ட மிகப் பெரிய கட்டடத் தொகுதிகள், தமிழ்நாட்டில் தொல்லியல் துறை மீதான ஆர்வத்தை ஏற்படுத்தின. கீழடியில் மூன்று கட்ட ஆய்வுகளை நடத்திய இந்தியத் தொல்லியல் துறை, அதற்குப் பிறகு அங்கு ஆய்வுகளை நடத்த விரும்பவில்லை. இதையடுத்து தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை அங்கு ஆய்வுகளை நடத்த ஆரம்பித்தது. அதன்படி 2017ஆம் ஆண்டிலிருந்து அங்கு தொடர்ச்சியாக ஆய்வுகள் நடந்து வருகின்றன.


கீழடியில் கிடைத்த கட்டடத் தொகுதிகள், எழுத்துப் பொறிப்புகள், பொருட்கள் ஆகியவை அங்கு ஒரு நகர நாகரீகம் இருந்ததை உறுதிசெய்தன.அதேபோல, பிராமி எழுத்து மௌரியர் தோற்றுவித்தது என்றும் அங்கிருந்தே தமிழ்நாட்டிற்கு அந்த எழுத்துகள் வந்தன என்றும் கருதப்பட்டது. ஆனால், கீழடியில் நடந்த ஆய்வுகளின் முடிவுகள், நகரமயமாக்கம் குறித்த கருத்துகளை மாற்றின. அந்த காலகட்டத்திலேயே பிராமி எனப்படும் தமிழி பரவலாக எழுதப்பட்டதை, அங்கு கிடைத்த பானை ஓடுகள் உறுதிப்படுத்தின.
இங்கு கிடைத்த தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளை ஆக்ஸிலரேட்டர் மாஸ் ஸ்பெக்ரோமெட்ரி முறையில் பகுப்பாய்வு செய்தபோது, அந்த பானை ஓடுகள், கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என தெரியவந்திருப்பதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.


கீழடியில் தற்போது மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளைப் பொறுத்தவரை, பெரிய அளவிலான செங்கல் கட்டுமானங்களும் தமிழி பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், கீறல்கள் எழுதப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இவை தவிர, மணிகள், கற்கள், தாயக்கட்டைகள், கங்கைச் சமவெளிக்கே உரியவை என்று கருதப்பட்ட கறுப்பு நிறப் பானைகள், சீப்புகள் போன்றவை கிடைத்துள்ளன.

இங்கு கிடைத்துள்ள கட்டுமானத்தையும் தொல்பொருட்களையும் வைத்துப் பார்க்கும்போது, கீழடி ஒரு பெரிய நகரமாக இருந்திருக்கக்கூடும் என்றும் இந்தியாவுடனும் இலங்கையுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருக்கக்கூடும் என்றும் தெரியவருவதாக மாநில தொல்லியல் துறையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

மேலும் இந்த அகழாய்வில் சந்திரன், சூரியன் மற்றும் வடிவியல் குறியீடுகளுடன் கூடிய வெள்ளிக் காசு ஒன்று கிடைத்தது. இந்தக் காசை, குப்தர் காலத்தைச் சேர்ந்த ஹர்தேக்கர் வரிசை காசுகளுடன் ஆய்வுசெய்த நாணயவியல் ஆய்வாளர் சுஷ்மிதா, இதனை மௌரியர் காலத்துக்கு முற்பட்ட காசு எனக் குறிப்பிட்டிருப்பதாக மாநிலத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. ஆகவே, கீழடி பகுதிக்கும் வட இந்தியப் பகுதிகளுக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்திருப்பதை இந்தக் காசு உறுதி செய்திருப்பதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via